கரோனாவால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த மருத்துவர்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே : படம் | ஏஎன்ஐ.
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே : படம் | ஏஎன்ஐ.
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பராமரிக்கவில்லை என்று மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.

அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் எத்தனை பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டார்கள், எத்தனை பேர் உயிரிழந்தார்கள் எனும் விவரங்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

''கரோனாவுக்கு எதிரான போரில் பணியில் இருந்தபோது தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பராமரிக்கவில்லை.

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளார்கள் எனும் விவரங்கள் மத்திய சுகாதாரத்துறையிடம் உள்ளன.

அந்த வகையில் ஆனால், செப்டம்பர் 11-ம் தேதிவரை கரோனாவில் 64 மருத்துவர்கள் உள்பட 155 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்று தெரியவருகிறது”.

இவ்வாறு அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.

கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு இழப்பீடு அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் இருக்கிறதா எனும் கேள்விக்கு, மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பதில் அளிக்கையில், “கரோனாவில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கோ அல்லது உறவினருக்கோ வேலை வழங்கும் திட்டமோ அல்லது இழப்பீடு வழங்கும் திட்டமோ அரசிடம் இல்லை.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சமூக சுகாதாரப் பணியாளர்களும் பயன்பெறலாம். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கையாளும்போது சமூகப் பணியாளர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டால், உயிரிழக்க நேர்ந்தால், காப்பீட்டுத் தொகை மூலம் ரூ.50 லட்சம் பெற முடியும்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in