

கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ஈடுகட்டும் வகையில், எம்.பி.க்களின் ஊதியத்தைக் குறைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில் துறைகடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளது. சிறு குறு தொழில்கள் முடங்கியுள்ளன.
கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதமாக சரிந்தது. இதன் காரணமாக, அரசுக்கு வர வேண்டிய வருவாய் கணிசமாக குறைந்திருந்தாலும் செலவினங்கள் அதிகரித்திருக்கின்றன.
இந்நிலையில், இந்தப் பொருளாதார சரிவை ஈடுகட்டும் விதமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியத்தை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, ஓராண்டுக்கு எம்.பி.க்களுக்கான ஊதியத்தில் 30 சதவீதம் வரை பிடித்தம் செய்யும் வகையிலான சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் கடந்த 15-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலமாக நேற்று நிறைவேறியது.