

பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளின் கணினிகளில் இருந்து ஏராளமான தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தால் டெல்லி போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளின் கணினிகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளன. எத்தனையோ பாதுகாப்பு வளையங்கள் இருந்தும் இந்தத் தகவல்கள் திருடு போயுள்ளன.
டெல்லியில் உள்ள தேசிய தகவல் மையத்தில்தான் (என்ஐசி) இந்தத் தகவல்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மையம்
தான் மத்திய அரசின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களை பாதுகாத்து வருகிறது.
இதுகுறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தவுடன் விசாரணை மேற்கொண்டோம். தகவல்களை திருடிய இ-மெயில் பெங்களூருவில் இருந்து வந்துள்ளது. பெங்களூருவில் இருக்கும் அமெரிக்க நிறுவனத்தில் இருந்து தேசிய தகவல் மையத்திற்கு இ மெயில் வந்துள்ளது. அந்த இ-மெயிலை திறக்கும்போது, தேசிய தகவல் மையத்தின் தகவல்கள் அனைத்தும் அந்த இ-மெயிலுக்கு சென்றுள்ளது. இ-மெயில் ஐபி முகவரி பெங்களூருவில் இருந்துதான் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லியிலுள்ள சிறப்பு போலீஸ் பிரிவு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
சீனாவில் இருக்கும் அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சென்ஹூவா இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர்கள், துணை குடியரசுத் தலைவர், நடிகர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், வர்த்தக நிறுவனங்கள், முன்னாள் முதல்வர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோரை வேவு பார்ப்பதாக அண்மையில் செய்தி வெளியானது.
இதுதொடர்பாக தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடை
பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழு 30 நாட்களில் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை மூலமாக சீன வெளியுறவுத் துறைக்கு எடுத்துச் சென்று இருப்பதாகவும் மத்திய அமைச்சர் கூறி இருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து, அந்த நிறுவனம் சீன நிறுவனம் அல்ல என்றும், தனியார் நிறுவனம் என்றும் கூறி இருந்ததாகவும் விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு முக்கிய தகவல் டேட்டா மையம் உலக அளவில் இருக்கும் 24 கோடி தனிப்பட்ட நபர்களின் தகவல்களை திரட்டி வைத்து இருப்பதாகவும், இதற்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.