

விவசாய மசோதாக்கள் அமலானால் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிலாளிகளாக விவசாயிகள் மாறும் அவலம் ஏற்படும் என சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் எதிராக வாக்களித்தது.
அதுமட்டுமல்லாமல் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை அகாலிதளம் கட்சி எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் நேற்று ராஜினாமா செய்து கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். குடியரசுத் தலைவர் ஹர்சிம்ரத் கவுரின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விவசாயிகள் நலனுக்காக எதிராக இருப்பதாகக் கூறப்படும் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடரந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. விவசாயிகளுக்கு எதிரான சதித்திட்டம். மிகவும் நெருக்கடியான காலத்தில் இந்த நாட்டை பாதுகாத்தவர்கள் விவசாயிகள். ஆனால் பெரிய தொழிலதிபர்களின் கைகளில் விவசாயிகளை ஒப்படைக்க சதி நடக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விவசாயத்தை வாடகைக்கு தந்து விட்டு விவசாயிகள் தொழிலாளிகளாக மாறும் அவலம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.