Last Updated : 26 Sep, 2015 09:02 AM

 

Published : 26 Sep 2015 09:02 AM
Last Updated : 26 Sep 2015 09:02 AM

ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் கவுன்ட் டவுன் இன்று தொடக்கம்: நாளை மறுநாள் விண்ணில் செலுத்தப்படுகிறது

இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளான ‘ஆஸ்ட்ரோசாட்' நாளை மறுநாள் பிஎஸ்எல்வி- சி30 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப் படுகிறது. இதற்கான கவுன்-டவுன் ஸ்ரீஹரிகோட்டாவில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குவதாக இஸ்ரோ அறிவித்துள்ள‌து.

இஸ்ரோவின் சந்திரயான்-1, மங்கள்யான் ஆகிய விண்கலங்களின் வெற்றியைத் தொடர்ந்து, விண்வெளி ஆய்வுக்கான ‘ஆஸ்ட்ரோசாட்' (ASTROSAT) செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளான இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி30 ராக்கெட் மூலம் நாளை மறுநாள் (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

பூமியிலிருந்து 650 கிமீ உயர‌த்தில் உள்ள சுற்றுவட்ட‌ப்பாதையில் நிலை நிறுத்தப்படும் இந்தச் செயற்கைக்கோள் 1,513 கிலோ எடையும் 5 ஆண்டுகள் ஆயுட்காலமும் கொண்டது. ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் விண்வெளியில் உள்ள புற ஊதா கதிர்கள், குறைந்த மற்றும் அதிக ஆற்றல் வாய்ந்த எக்ஸ்ரே கதிர்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும்.

சூரிய குடும்பத்தை தவிர‌ பிற கோள்கள் குறித்து அறிந்து கொள்ள இந்த செயற்கைக்கோள் உதவும்.

“ஆஸ்ட்ரோசாட்' உடன் இந்தோனேசியாவின் லெபான்-ஏ2 (76 கிலோ), கனடாவின் என்எல்எஸ்-14 (14 கிலோ), அமெரிக்காவின் 4 லெமூர் வகை செயற்கைக்கோள்கள் (28 கிலோ) ஆகிய செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி.-சி30 ராக்கெட்டுடன் செலுத்தப்பட உள்ளன. இந்த செயற்கைக்கோள்கள் தொடர்பான இறுதிக்கட்ட சோதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று மேற்கொண்டனர்.

விண்கல சோதனைக் குழு, விண்ணில் செலுத்துவதற்கான ஆணையம் ஆகியவை அனைத்து பரிசோதனைகளை யும் முடித்தனர். இதையடுத்து செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற்கான ‘கவுன்ட்-டவுன்' இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும் என அறிவித்தனர். இந்த பி.எஸ்.எல்.வி. - சி30 ராக்கெட் வருகிற‌ திங்கள்கிழமை காலை 10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

விண்வெளி ஆய்வுத் துறையில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் மட்டுமே இதுவரை விண்வெளி ஆய்வு செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளன. தற்போது ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளை வெற்றிகரமாக ஏவினால், இந்த பட்டியலில் இந்தியா 4-வது நாடாக இடம்பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x