மேகேதாட்டு அணை கட்ட விரைவாக ஒப்புதல் வழங்கிட வேண்டும்: பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோரிக்கை

பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா : கோப்புப் படம்.
பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா : கோப்புப் படம்.
Updated on
2 min read

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கும், கலசா பந்தூரி நலா குடிநீர் திட்டத்துக்கும் மத்திய அரசு விரைவாக அனுமதி தர வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா இன்று வலியுறுத்தினார்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட அம்மாநில அரசு திட்ட வரைவு அறிக்கை தயாரித்துள்ளது.

இதற்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதற்கு தமிழக அரசும், பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மத்திய அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்கியதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேகேதாட்டு அணை என்பது 67.16 டிஎம்சி கொள்ளளவில், ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணையில் சேமிக்கப்படும் நீரை பெங்களூரு நகரத்துக்கும், சுற்றியுள்ள பகுதிகளுக்கும் வழங்க அணை கட்டப்படுகிறது. அதேமயம், வழக்கமாக ஆண்டுதோறும் தமிழகத்துக்கு வழங்கப்படும் 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்குவதில் எந்தத் தடையும் இந்த அணை கட்டுவதால் வராது என்று கர்நாடக அரசு கூறி வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா டெல்லியில் இன்று சந்தித்தார். பிரதமர் மோடியிடம் ஏறக்குறைய 15 நிமிடங்கள் எடியூரப்பா பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, கர்நாடகத்தின் வளர்ச்சித் தி்ட்டங்கள் குறித்தும், நவம்பர் 19-ம் தேதி தொடங்கும் பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டைக் காணொலியில் தொடங்கி வைக்கவும் எடியூரப்பா, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

இம்மாதம் நடைபெற வேண்டிய பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு கரோனா வைரஸ் பரவல் காரணமாக நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தது கர்நாடக அரசு.

கர்நாடக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “பிரதமர் மோடியுடன் முதல்வர் எடியூரப்பா 15 நிமிடங்கள் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, தேசிய பேரிடர் நிதியிலிருந்து கர்நாடக அரசுக்கு நிதி வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

நடப்பு ஆண்டில் மாநில பேரிடர் நிதி அல்லது தேசிய பேரிடர் நிதியிலிருந்து நிதியை உரிய காலத்துக்குள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட விரைவாக நிதி வழங்க விதிகளை மறுபரிசீலனை செய்யக் கோரினார்.
கர்நாடகத்தில் பாசனத் திட்டங்களான அப்பர் கிருஷ்ணா திட்டம்-3, அப்பர் பாத்ரா திட்டம் ஆகியவற்றை தேசியத் திட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் எடியூரப்பா கேட்டுக்கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் காவிரியின் குறுக்கே குடிநீர், பாசனம் மற்றும் மின் உற்பத்திக்காக கட்டப்பட இருக்கும் மேகேதாட்டு அணைக்கு விரைவாக ஒப்புதல் வழங்கிட வேண்டும் என்றும், மாநிலத்துக்கு குடிநீர் வழங்கும் கலசா பந்தூரி நலா திட்டத்துக்கும் விரைந்து சுற்றுச்சூழல் மற்றும் ஒப்புதல்களை வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில் கலசா பந்தூரி நலா திட்டம் என்பது கர்நாடகா-கோவா இடையே செல்லும் மகதாயி நதியின் குறுக்கே கட்டப்படும் அணையாகும். இந்தத் திட்டத்துக்கு கோவா மாநில அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு ஏற்படும், மகதாயி ஆற்றின் நீரின் தரம் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in