

மத்திய உணவுப் பதப்படுத்தும் துறை அமைச்சர் பதவியை சிரோன்மணி அகாலி தளம் எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தது நாடகம். அமைச்சரவை அவசரச் சட்டம் பிறப்பிக்கும்போது ஏன் ஹர்சிம்ரத் கவுர் எதிர்ப்புத் தெரிவி்க்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் துறை தொடர்பான 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்த வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மத்தியில் அமைந்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிரோன்மணி அகாலிதளம் கட்சியும் வேளாண் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் நடந்த வாக்கெடுப்பிலும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் எம்.பி. சுக்பிர்சிங் பாதல், அவரின் மனைவியும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் எதிராக வாக்களித்தனர்.
மேலும், மத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கவுர் நேற்று ராஜினாமா செய்து கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று சிரோன்மணி அகாலிதளம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிரோன்மணி அகாலிதளம் நாடகம் நடத்துகிறது என்றும், ஹர்சிம்ரதன் கவுர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது நாடகம் என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மத்திய அமைச்சர் பதவியை ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்திருப்பது நாடகம். இது சிரோன்மணி அகாலிதளம் கட்சி நீண்டகாலமாக நடத்தும் நாடகத்தின் ஒரு பகுதிதான். நாடகம் இல்லைெயன்றால், ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகவில்லை. விவசாயிகளின் நலனுக்காக இந்த முடிவை அவர்கள் எடுக்கவில்லை. அரசியல் நலன்களுக்காகத்தான் ராஜினாமா செய்துள்ளார்கள். இது மிகவும் தாமதமான முடிவு” என விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் ஏன் அகாலிதளம் இருக்கிறது. உண்மையின் பக்கம் அகாலிதளம் நிற்க வேண்டும். அமைச்சரவை மசோதாக்கள் குறித்த முடிவு எடுத்தபோதே அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஏன் எதிர்க்கவில்லை?
ஏன் ராஜினாமா செய்யவில்லை. மோடி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை ஏன் அகாலிதளம் ஏன் திரும்பப் பெறவில்லை. நாடகம் நடத்த வேண்டாம், விவசாயிகள் பக்கம் நில்லுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில் சுர்ஜேவாலா ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவைக் கண்டித்துள்ளார். அதில், “ துஷ்யந்த் ஜி, ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா நாடகத்தில் நீங்கள் ஏதாவது செய்து, துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள். பதவி மீது இருக்கும் அன்பு ஏன் விவசாயிகள் மீது இல்லை. உண்மையில் சில மர்மங்கள் இருக்கின்றன. நிச்சயம் விவசாயிகள் உங்களை மன்னிக்கமாட்டார்கள். ஜனநாயக ஜனதா கட்சி, பாஜகவுடன் சேர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் குற்றத்தைச் செய்கிறது” எனத் தெரிவித்தார்
பஞ்சாப் காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவி்ட்ட கருத்தில், “ஹர்சிம்ரத் கவுர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் அகாலிதளம் தொடர்கிறது. இதுதான் சமூக விலகலா” எனக் கிண்டல் செய்துள்ளது.