

சத்திஸ்கர் மாநில சுர்குஜா மாவட்டத்தில் உள்ள மத்ரிங்கா கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அரசாங்கத்தை நம்பாமல் தாங்களாகவே மலையிலிருந்து குழாய் அமைப்புகளை நிறுவி தங்கள் தண்ணீர் கஷ்டத்தை தீர்த்துக் கொண்டுள்ளனர்.
மலையில் இயற்கை ஊற்று உள்ளது. இந்த கிராமத்திலிருந்து மலைக்குச் சென்று தண்ணீர் எடுத்து வருவது அவ்வளவு எளிதல்ல. தண்ணீர் கஷ்டமோ அதிகம். எனவேதான் கிராம மக்களே குழாய்கள் அமைக்க முடிவெடுத்தனர்.
இது தொடர்பாக கிராமத் தலைவர் ராம், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குக் கூறும்போது, “தண்ணீர் பிரச்சினை இங்கு கொஞ்ச காலமாக இருந்து வருகிறது. மலையிலிருக்கும் நீராதாரத்திலிருந்து தண்ணீர் எடுத்து வருவது நாளுக்குநாள் கஷ்டமாக இருந்து வருகிறது.
அதனால் மலையில் உள்ள நீரூற்றிலிருந்து கிராமத்துக்கு குழாய்கள் அமைத்து தண்ணீரை கொண்டு வர மக்களே திட்டமிட்டனர். இதனால் பொறியாளர் ஒருவரை ஆலோசித்தோம், அதன் பிறகு பூமியில் பள்ளம் தோண்டி குழாய்களை மலை நீரூற்றிலிருந்து அமைத்து கிராமத்துக்குக் கொண்டு நீரை கொண்டு வந்தோம்.
நிலத்தடி நீர் எடுப்பதற்கும் வழியில்லை. இப்போது பிரச்சினையில்லை.
குழாய்கள் அமைத்து கிராமத்துக்கு தண்ணீர் வரவழைத்ததையடுத்து கிராம மக்கள் குதூகலமடைந்துள்ளனர். ஆனால் அரசு தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அந்த கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.