Last Updated : 18 Sep, 2020 08:35 AM

 

Published : 18 Sep 2020 08:35 AM
Last Updated : 18 Sep 2020 08:35 AM

'விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரான மோடி அரசின் மசோதாக்கள்': நகல்களை எரித்து பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

மத்தியில் ஆளும் மோடி தலைமை பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய விவசாயச் சட்டங்கள் பசுமைப் புரட்சியின் நோக்கங்களைத் தோற்கடித்து விவசாயிகளின் வாழ்வுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் எதிராக உள்ளன என்று பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.க்கள் சட்ட நகல்களை எரித்து நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மசோதாக்களை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையின் முன்பாக போராட்டம் நடத்தினர். அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

லோக்சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் விவசாயிகள் விளைபொருள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (வளர்ச்சி மற்றும் வசதி) மசோதா, விவசாயிகள் (அதிகாரம் வழங்குதல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத மற்றும் வேளாண் சேவைகள் மசோதா, 2020 ஆகிய மசோதாக்களை நிறைவேற்றினர்.

ஏற்கெனவே அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதாவையும் நிறைவேற்றியது. இது ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட அவசரச் சட்டங்களை இந்த மசோதாக்கள் பதிலீடு செய்கின்றன.

மோடியின் புதிய ஜமீந்தாரிகள்: ராகுல் காந்தி கடும் தாக்கு.

இது தொடர்பாக ராகுல் காந்தி இந்தி மொழியில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “விவசாயிகள் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் விவசாயிகளை பொருளாதார ரீதியாகச் சுரண்டவும், விவசாயக்கூலிகளைச் சுரண்டவும் கருப்புச் சட்டங்களை மீண்டும் கொண்டு வருகிறார். இது புதிய ஜமீன்தாரி முறை, இதில் மோடியின் நண்பர்கள் சிலர் புதிய இந்தியாவின் புதிய ஜமீன்தார்கள். வேளாண் சந்தைகளை முடித்து விட்டால் நாட்டின் உணவுப்பாதுகாப்பும் அழிந்து விடும்” என்று பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் லோக்சபா துணைத்தலைவர் கவுரவ் கோகய், “இந்த ஆட்சி தங்களது முதலாளித்துவ நண்பர்களுக்காக விவசாயிகளின் நிலங்களைப் பயனாக்கலாம் என்று பார்த்து வருகிறது. இது நில அபகரிப்புச் சட்டமாயினும் சரி, அல்லது தொழிலாளர் நீதிமன்றங்களைப் பலவீனமாக்குவதாக இருந்தாலும் சரி, மொத்தத்தில் விவசாயிகளை அழிப்பதாகும். அதாவது 2 மசோதாக்கள் மூலம் விவசாயிகள், விவசாயக் கூலிகள் மீதான மும்முனைத் தாக்குதல்” என்று பேசினார்.

காங்கிரஸ் எம்.பி ஜஸ்பிர் சிங் கில், ரன்வீத் சிங் பிட்டு, குர்ஜித் சிங் அயுலா, அமர்சிங் ஆகியோர் மசோதாக்களின் நகல்களை எரித்தனர்.

பிறகு விஜய் சவுக்கில் காங்கிரஸ் தலைவர்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கவுரவ் கோகய் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து, பசுமைப் புரட்சியைத் தோற்கடிக்கும் மோடி அரசின் சதி வேலையாகும் இது என்று தாக்கினர்.

“மோடி அரசு விவசாயிகளையும் விவசாயக் கூலிகளையும், விவசாயத்தையும் சில ஆளும் நலம் விரும்பி முதலாளிகளின் வீட்டு வாசற்படியில் கிடத்தி அடகு வைக்கிறது.இப்படிப்பட்ட அடக்குமுறைச் சட்டங்கள் இந்தியாவின் எதிர்கால வேளாண்மையை அழிக்கும், அன்னமிடும் கைகளை முதலாளிகளுக்கு அடகு வைக்கின்றனர்.

நாடு முழுதும் 62 கோடி விவசாயிகள், விவசாயக் கூலிகள், 250 விவசாய அமைப்புகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்கள் நலம் விரும்பிகளான சில முதலாளி நண்பர்களுக்கு பிரதமர் மோடி சேவையாற்றுகிறார். தொடர்ந்து விவசாயிகளின் வலி குறித்து கண்டும் காணாமல் இருந்து வருகிறார். ஒவ்வொரு எதிர்ப்புக் குரலும் ஒடுக்கப்படுகின்றன. மோடி அரசு சர்வாதிகார முறையில் நாடாளுமன்றத்தில் விவசாயிகளின் பிரதிநிதிகளின் குரல்களை அடக்குகிறது. போலீஸ் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது, இதன் மூலம் எதிர்க்கும் விவசாய சமூகத்தினரை அடக்கி வைக்கிறது.

கரோனாவை சாக்காக வைத்து விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளை தங்கள் நலம் விரும்பும் முதலாளிகளின் நலன்களுக்கான வாய்ப்பாக மாற்றப் பார்க்கிறது மோடி அரசு. பாஜகவின் அடுத்த தலைமுறையினர் இந்த பாஜக அரசின் தவறான நடவடிக்கைகளின் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்.

விவசாயிகளுக்கு எதிரான இருண்ட அவர்களது டிசைனை, சர்வாதிகாரப் போக்குகளை காங்கிரஸ் ஒரு போதும் அனுமதிக்காது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நிச்சயம் போராடுவோம்.

பஞ்சாபில் விவசாயிகள் போராடி வருகின்றனர், ஆனால் சிரோன்மணி அகாலிதளம் பாஜக தலைமை தேஜகூவில் இன்னும் நீடித்து வருகிறது.

நாங்கள் இந்த மசோதாக்களை நாடாளுமன்றம் முதல் பஞ்சாயத்துக்கள் வரை எதிர்ப்போம். அனைத்து எம்.பி.க்களும் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க முறையிடுவோம். மனசாட்சி, நிலம் ஆகியவற்றுக்காக போராடுவோம்

இந்த மசோதாவின் மிக முக்கியமான தவறு என்னவெனில் ஒப்பந்த முறையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்பது கட்டாயமல்ல.

மண்டி முறை ஒழிக்கப்பட்டு விட்டால், விவசாயிகள் ஒப்பந்த வேளாண்மையை நம்பியே இருக்க வேண்டியதாகும். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய விளைபொருட்களின் விலையைத் தீர்மானிக்கும். இது புதிய ஜமீன்தாரி முறை இல்லாமல் வேறு என்னவாம்?”

இவ்வாறு காங்கிரஸ் எம்.பி.க்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டாகத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x