

கூடங்குளத்தில் அணுஉலைக்கு வெளியே கதிரியக்கக் கழிவுகளை (பயன்படுத்தப்பட்ட எரிபொருள்) சேமிக்கும் மையம் அமைக்கப்படும் என மத்திய விண்வெளி மற்றும் அணுசக்தித் துறைஇணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி.சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் நேற்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
கூடங்குளம் அணு உலைகளில் இருந்து வரும் கதிரியக்கக் கழிவுகள் முதல்கட்டமாக அணுஉலை கட்டிடத்திலேயே உள்ள சேமிப்புத் தொட்டிகளில் சேமிக்கப்படும். பிறகு இதனை சேமிப்பதற்கு என அணு உலைக்கு வெளியே தனி மையம் (ஏஎப்ஆர்) ஏற்படுத்தப்படும். கதிரியக்கக் கழிவுகள் மறுசுழற்சிக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை இங்கு சேமிக்கப்படும்.
கூடங்குளத்தில் ஏஎப்ஆர் ஏற்படுத்துவதற்கு பல்வேறு அனுமதிகளை பெற வேண்டியுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மிகக்குறைந்த அளவிலான கதிரியக்கக் கழிவுகள் உற்பத்தியாகும் 'closed fuel cycle' என்ற தொழில்நுட்பத்தை இந்தியா கடைப்பிடித்து வருகிறது.
கதிரியக்கக் கழிவுகளை பிரிப்பது, எரிப்பது உள்ளிட்ட அடுத்தகட்ட தொழில்நுட்பங்கள் நாட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கதிரியக்கக் கழிவுகள் மேலும் குறையும். மிகக் குறைந்த அளவே கதிரியக்கக் கழிவுகள் உருவாகும் என்பதால் பூமியில் மிக ஆழத்தில் சேமிப்பு மையம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் எதிர்காலத்தில் இருக்காது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.