

கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரை சேர்ந்த அசோக் கஸ்தி (55) தன்பள்ளி காலத்திலேயே ஆர்எஸ்எஸ்அமைப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போது ஏபிவிபி அமைப்பில் தீவிரமாக இயங்கிய அவர், பின்னர் பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 22-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அசோக் கஸ்திக்கு கடந்த 2-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பெங்களூருவில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அசோக் கஸ்திக்கு ஏற்கெனவே இதயம், சிறுநீரகக் கோளாறு இருந்ததால் உடல்நிலை மோசமானது. நுரையீரல் வெகுவாக பாதிக்கப்பட்டதால் கடந்த சில தினங்களாக சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் பல்வேறு உறுப்புகள் செயலிழந்ததால் நேற்று பிற்பகல் அசோக் கஸ்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு குடியரசுதுணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.