

இந்திய தலைவர்களை சீன நிறுவனம் உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே, 5 முன்னாள் பிரதமர்கள், 40 முன்னாள், இந்நாள் முதல்வர்கள், 350 எம்.பி.க்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் இந்திய தலைவர்களை சீனாவை சேர்ந்த ஜென்ஹுவா நிறுவனம் உளவு பார்த்திருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.
ட்விட்டர், பேஸ்புக், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக இந்திய தலைவர்களின் தகவல்களை சீன நிறுவனம் திருடியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் வேணுகோபால் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
"இந்திய தலைவர்களை சீன நிறுவனம் வேவு பார்த்தது தொடர்பாக விசாரணை நடத்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்" என்று அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.வேணுகோபால் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய தலைவர்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டுள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு குழு நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அந்த குழு 30 நாட்களில் அறிக்கை அளிக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சீன நிறுவனத்தின் உளவு விவகாரம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "ஜென்ஹுவா டேட்டா இன்பர்மேஷன் டெக்னாலஜி கோ தனியார் நிறுவனமாகும். இணையத்தில் பகிரங்கமாக வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே அந்த நிறுவனம் திரட்டியுள்ளது. சைபர் குற்றங்களை சீன அரசு கடுமையாக எதிர்க்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
'ஜென்ஹுவா டேட்டா இன்பர்மேஷன் டெக்னாலஜி கோ நிறுவனம்', அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜப்பான், கனடா, இந்தோனேசியா, மலேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், அரசு, நீதித் துறை தலைவர்கள், மூத்த அதிகாரிகளையும் உளவு பார்த்திருப்பது அம்பலமாகி உள்ளது.