முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு கேரளா ஆய்வு நடத்த அனுமதி ரத்து

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு கேரளா ஆய்வு  நடத்த அனுமதி ரத்து
Updated on
1 min read

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான சுற்றுச்சூழல் ஆய்வுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை தேசிய வன உயிரின ஆணையம் திடீரென ரத்து செய்துள்ளது. இது கேரள அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முல்லை பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாக கூறி அணையின் நீர்மட்டத்தை கேரள அரசு 136 அடியாகக் குறைத்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் முல்லை பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட எந்த முயற்சியும் மேற்கொள்ளக்கூடாது என்று ஐந்து நீதிபதிகள் அமர்வு கண்டிப்பாக உத்தரவிட்டது.

ஆனால் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போதைய அணையில் இருந்து 366 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்ட அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அங்கு அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு நடத்த அனுமதி கோரி மத்திய வனம், சுற்றுச்சூழல் துறையிடம் கேரள அரசு விண்ணப்பித்தது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை. எனினும் மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டதாக கேரள அரசு அவ்வப்போது தகவல்களை வெளியிட்டது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அண்மையில் நிருபர்களிடம் கூறியபோது, முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு அனுமதி வழங்கப்படவில்லை, கேரள அரசின் விண்ணப்பம் பரிசீலனையில் மட்டுமே உள்ளது என்று விளக்கம் அளித்தார்.

இதனிடையே தேசிய வன உயிரின ஆணையம் முன்னர் வழங்கிய அனுமதியை சுட்டிக் காட்டி அணை கட்டுவது தொடர்பான ஆய்வுப் பணிகளைத் தொடங்குவோம் என்று கேரள அரசு பிடிவாதமாக கூறியது. இதில் எதிர்பாராத திருப்பமாக கேரள அரசுக்கு வழங்கிய அனுமதியை தேசிய வன உயிரின ஆணையம் திடீரென ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. தேசிய வன உயிரின ஆணையத்திடம் விண்ணப்பித்தபோது இந்த உண்மையை கேரள அரசு மறைத்துவிட்டது. இவ்விவகாரம் நீதிமன்ற ஆய்வில் இருப்பதால் முன்பு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வன உயிரின ஆணையம் தனது அனுமதியை ரத்து செய்துள்ளதால் புதிய அணை தொடர்பான ஆய்வை கேரள அரசு இனிமேல் தொடங்க முடியாது. இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்வரை கேரள அரசு காத்திருக்க வேண்டும். இது கேரள மாநில அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படு கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in