

பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழியை ஏற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னாள் ராணுவ வீரர்கள் நேற்று வாபஸ் பெற்றனர்.
ராணுவத்தில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி முன்னாள் ராணுவ வீரர்கள் டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் 2014 ஜூலையில் இருந்து கணக்கிட்டு அமல்படுத்தப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் டெல்லியில் நேற்று முன்தினம் அறிவித்தார்.
ஆனால் அரசின் அறிவிப்புக்கு ராணுவ வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தை முன்னின்று நடத்திய மேஜர் ஜெனரல் சத்பீர் சிங் கூறியபோது, எங்களின் ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. 4 முக்கிய அம்சங்களை நிராகரித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
சுமார் 40 சதவீத முன்னாள் ராணுவ வீரர்கள் பணிக்காலத்துக்கு முன்பே ஓய்வு பெற்றுள்ளனர். அவர்கள் திட்டத்தில் இணைக்கப்படாததை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்றும் அவர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முன்னாள் ராணுவ வீரர்களின் பிரதிநிதிகளை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அழைத்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.
பிரதமர் விளக்கம்
இதைத் தொடர்ந்து ஹரியாணா மாநிலம் பரீதாபாதில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ராணுவத்தினருக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தால் அரசுக்கு ரூ.8 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.10 ஆயிரம் கோடி வரை தொடர் செலவு ஏற்படும். பணிக்காலத்துக்கு முன்பே பதவி விலகியோருக்கான ஓய்வூதியம் பற்றி சிலர் (காங்கிரஸ்) திட்டமிட்டு பொய் தகவல்களை பரப்புகின்றனர். அந்த வகையில் ஜவான்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது என்று கூறி அவர்கள் குழப்பம் விளைவிக்கிறார்கள்.
ராணுவத்தில் 85 சதவீதம் பேர் ஜவான்கள்தான். 15 அல்லது 17 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு கட்டாயத்தின்பேரில் விலகினாலும் அவர்களுக்கு நிச்சயமாக ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கும். இத்திட்டத்தில் ஜவான்கள்தான் அதிகம் பயன் பெறுவார்கள். இத்திட்டம் மிகுந்த சிக்கலானது என்பதால் அதில் உள்ள பிரச்சினை கள் குறித்து ஆராய நீதித்துறை கமிஷன் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
உண்ணாவிரதம் வாபஸ்
பிரதமரின் விளக்கத்தைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் சத்பீர் சிங் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
பணிக்காலத்துக்கு முன்பே ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிமொழி அளித்துள்ளார். இதை ஏற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.
எனினும் எங்களது நான்கு முக்கிய கோரிக்கைகள் இன்னமும் ஏற்கப்படவில்லை. அவற்றை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.
ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியதற்காக பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.