மோடியின் தலைமையில் கீழ் ஒரு அரசு இருக்கிறதா அல்லது இரு அரசுகள் செயல்படுகின்றனவா?-ப.சிதம்பரம் கேள்வி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: கோப்புப் படம்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: கோப்புப் படம்.
Updated on
1 min read

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஒரு அரசுதான் செயல்படுகிறதா அல்லது இரு அரசுகள் செயல்படுகின்றனவா என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீட்சி குறித்து மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸும் இரு வேறு முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்ததைக் குறிப்பிட்டு ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனிடம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மீட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ வி வடிவத்தில் (விரைவான வளர்ச்சி) பொருளாதார வளர்ச்சி எதிர்காலத்தில் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

ஆனால், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் ஊடகங்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் அளி்த்த பேட்டியில், “நாட்டின் பொருளாதாரம் சரிவிலிருந்து மெல்லத்தான் மீளும், விரைவான பொருளாதார வளர்ச்சியைக் காண முடியாது” எனத் தெரிவித்தார்.

இதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

“விரைவான பொருளாதார வளர்ச்சி இருக்கும் எனும் நம்பிக்கையை உடைத்த ரிசர்வ் வங்கி கவர்னர், பொருளாதார வளர்ச்சி படிப்படியாக நீண்டகாலத்தில்தான் இருக்கும் என்று தெரிவித்தார்.

ஆனால், தலைமைப் பொருளாதார ஆலோசகர், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி நிலையிலிருந்து விரைவாக வளர்ச்சியை நோக்கி மேலே எழும்பும் என்று ஒவ்வொரு நேர்காணலிலும் தெரிவிக்கிறார்.

கிழக்கு லடாக்கில், சீனா-இந்தியா விவகாரத்திலும் ஒவ்வொரு அமைச்சரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்.

உள்துறை இணையமைச்சர் நித்யானந்தராய் மாநிலங்களவையில் அளித்த பதிலில், கடந்த 6 மாதங்களாக இந்தியா-சீனா எல்லையில் எந்தவிதமான ஊடுருவல்களும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.

ஆனால், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் பல்வேறு தளங்களில் பேசுகையில், எல்லையில் சீனாவின் அத்துமீறலைக் கண்டிக்கிறார்கள். அமைதியும் நிலைத்தன்மையும் எல்லையில் வரவேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

பிரதமர் மோடியின் கீழ் ஒரு அரசாங்கம் செயல்படுகிறதா அல்லது இரு அரசாங்கங்கள் செயல்படுகிறதா என உங்களை வியப்பில் ஆழ்த்துகிறதா?''

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in