

சமூக சேவகி மேதா பட்கரும் அவரது ஆதரவாளர்களும் அலகாபாதில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாதில் இருந்து 50 கி.மீட்டர் தொலைவில் காச்ரி கிராமம் உள்ளது. அங்கு மின்உற்பத்தி நிலையம் அமைக்க உத்தரப் பிரதேச அரசு நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது போலீஸாருடன் மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த தகவல் அறிந்த சமூக சேவகி மேதா பட்கர், கிராமத்தினரைச் சந்திக்க காச்ரி கிராமத்துக்கு சென்றார்.
அப்போது மேதா பட்கரையும் அவரது ஆதரவாளர்களையும் அலகாபாதில் தடுத்து நிறுத்திய போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஆசுதோஷ் மிஸ்ரா கூறியதாவது: பதற்றம் மிக்க பகுதியாக இந்த கிராமம் இருப்பதால் முன் அனுமதி பெறாமல் சென்றதாக மேதா பட்கர் உட்பட 10 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளோம்.
ஊராட்சித் தேர்தலையொட்டி அங்கு நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அந்த கிராமத்துக்குச் செல்ல அனுமதி கேட்டாலும் அதை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.