டெல்லி கலவரத்தில் போலீஸாரின் பங்கு குறித்து விசாரணை தேவை: குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, கனிமொழி, அகமது படேல்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்த எதிர்க்கட்சித் தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, கனிமொழி, அகமது படேல்.
Updated on
2 min read

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கலவரத்தில் போலீஸாரின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அந்தக் கலவரம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளித்தனர்.

என்ஆர்சி, சிஏஏ தொடர்பாக டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் கலவரம் வெடித்தது. இதில் 53 பேர் கொல்லப்பட்டார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமானோர் துப்பாக்கிக் குண்டால் காயமடைந்தனர்.

இந்தக் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீஸார், துணைக் குற்றப்பத்திரிகையில் டெல்லி கலவரத்தைத் தூண்டிவிட்டதாக பல்வேறு சமூக ஆர்வலர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரின் பெயரைச் சேர்த்துள்ளனர்.

இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. டெல்லி போலீஸார் நடத்திய விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அதன் பிரதிநிதிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் டெல்லி கலவரத்தில் போலீஸாரின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும், போலீஸார் தற்போதுவரை நடத்திய விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, திமுக சார்பில் கனிமொழி எம்.பி. காங்கிரஸ் கட்சி சார்பில் அகமது படேல் ஆகியோர் சென்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு அளித்தனர்.

எதிர்க்கட்சிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

''டெல்லி கலவரத்தை விசாரிக்க டெல்லி போலீஸார் சார்பில் சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கலவரத்துக்கு பின்னால் இருக்கும் சதித் திட்டம் குறித்து விசாரிக்க வேண்டும். இந்தக் கலவரத்தில் போலீஸாரின் பங்கு குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் துன்புறுத்தியது, ஆர்வலர்கள் மீது பொய்யான வழக்குகளைத் தொடர்ந்தது போன்றவை சந்தேகங்களை எழுப்புகின்றன. திட்டமிட்டு செய்யப்பட்ட இந்தச் சதித்திட்டத்தில் தற்போது அரசியல் கட்சித் தலைவர்களும் பொய்யான குற்றச்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணையின் மீது பல்வேறு தீவிரமான கேள்விகளும், மனவருத்தத்தை அளிக்கின்றன. பொதுவெளியில் வெளியே வந்த ஏராளமான வீடியோக்கள், புகைப்படங்களில் போலீஸாரும் இந்த வன்முறையில் சேர்ந்து ஈடுபட்டு, கற்களை வீசக் கும்பல்களுக்கு உத்தரவிடுவதும், அவர்களைத் தூண்டிவிடுவதிலும் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது.

இந்தக் கலவரத்தின்போது வெளியான ஒரு வீடியோவில், சீருடை அணிந்த ஒரு போலீஸார், இளைஞர் ஒருவரைச் சாலையில் தாக்கி, அவரை வலுக்கட்டாயமாக தேசிய கீதம் பாட வைத்து, தொடர்ந்து அடித்த காட்சி வேதனையாக இருந்தது. இந்தக் கலவரத்தில் காயமடைந்த பைஜான் என்ற இளைஞர் சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார்.

இந்தக் கலவரத்தில் டிசிபி அமைதியாக பாஜக தலைவர்களுடன் சேர்ந்து நின்றிருந்தார். கலவரத்தை பாஜக தலைவர்கள்தான் தூண்டிவிட்டு, போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்கள்.

கலவரத்தில் பல்வேறு மூத்த போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டது குறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், எந்த போலீஸாரும் அடையாளம் காணப்படவில்லை. அவர்களின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இல்லை.

பாஜக தலைவர்கள் வெறுப்புணர்வுடன் பேசும்போது போலீஸார் அமைதியாக வேடிக்கை பார்த்தனர். தங்களின் துறையைச் சேர்ந்த மற்ற அதிகாரிகளே வன்முறையில் ஈடுபட்டபோது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டுமெனில், நம்பகத்தன்மையான, நடுநிலையான விசாரணை தேவை. இந்தக் கலவரம் தொடர்பாக பதவியில் உள்ள, அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும்''.

இவ்வாறு அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in