Published : 17 Sep 2020 04:29 PM
Last Updated : 17 Sep 2020 04:29 PM

மோடி என்ற பெயரைத் தவிர வேறு பெயர்களைத் தெரியாது, வேளாண் அமைச்சர் பெயர் தெரியாத பாஜக பேச்சாளர்: ராமச்சந்திர குஹா வியப்பு

பாஜகவில் ஒலிக்கும் ஒரே பெயர் பிரதமர் மோடி மட்டுமே, அதைத்தவிர அவர்களுக்கு வேறு பெயர்கள் தெரியாது, என்பதை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கண்ணுற்றதாக வரலாற்றாசிரியர், எழுத்தாளர் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.

என்.டி.டிவி ஆங்கில இணையதளத்தில் அவர் எழுதிய பத்தியில் ‘வலுவான பிரதமர்களுடைய பிரச்சினை’ என்ற தலைப்பில் ஆளுமை கட்டமைப்பு, தலைமை வழிபாடு குறித்து எழுதியுள்ளார்.

அந்தப் பத்தியில் தான் பங்கேற்ற ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடந்ததை அவர் விவரிக்கும் போது, “ஒரு அரிதான டிவி சேனல் ஒரு அரிதான நிகழ்ச்சியில் சரிந்த ஜிடிபி பற்றி விவாதம் நடத்தப்பட்டது.

அந்த விவாதத்தின் ஒரு கட்டத்தில் சமாஜ்வாதி சார்பாக பங்கேற்ற கருத்தாளர் அதே விவாதத்தில் பங்கேற்ற பாஜக கருத்தாளரிடம் பதவியிலிருக்கும் வேளாண் அமைச்சர் யார் என்று கேட்டார். இந்த விவசாயத்துறைதான் அதிகம் பேர்களை நாட்டில் வேலையில் அமர்த்தியுள்ளது.

ஆளும் கட்சி கருத்தாளர் அல்லது பேச்சாளருக்கு வேளாண் அமைச்சர் பெயர் தெரிந்திருக்க வேண்டும், ஆனால் இந்த பாஜக நபருக்கு யார் என்று தெரியவில்லை. இதில் துன்பகர்மான உண்மை என்னவெனில் அவர் அதைத் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை என்பதே.

ஏன் அவருக்கு வேளாண் அமைச்சர் பெயர் தெரியவில்லை, ஏனெனில் இந்த அரசு எதைப்பற்றி பேசினாலும் செய்தாலும் மோடி மோடி, மோடி என்றே கூறுகிறது. 1970-களில் காங்கிரஸாருக்கு இந்திரா, இந்திரா, இந்திரா என்பது போல்” என்று அந்தப் பத்தியில் எழுதியுள்ளார்.

அதே பத்தியில் அவர் பிரதமர் மோடியின் மையப்படுத்தும் தலைமையை வாஜ்பாயியின் தலைமையுடன் ஒப்பிட்ட போது, வாஜ்பாயி அமைச்சரவையில் சிறந்த தலைவர்களான அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, எம்.எம்.ஜோஷி, ஜஸ்வந்த் சிங், பிரமோத் மகாஜன், அருண் ஷோரி சுஷ்மா ஸ்வராஜ் போன்றோர் சுதந்திரமாகச் செயல்பட முடிந்தது. அதே போல் அதே அமைச்சரவையில் இருந்த பாஜக அல்லாத அமைச்சர்களான ஜார்ஜ் பெர்னாண்டஸ், மமதா பேனர்ஜி ஆகியோருக்கும் சுதந்திரம் இருந்தது. வாஜ்பாயியின் இந்தப் பாணி தலைமையில்தான் இந்தியா பொருளாதாரம், அயல்நாட்டுக் கொள்கை, பாதுகாப்பு தயாரிப்பு நிலை, உலகில் நம் நாட்டின் நிலை ஆகியவற்றில் வாஜ்பாயியின் இந்தியா மோடியின் இந்தியாவை விட சிறந்து விளங்கக் காரணமானது என்று அந்தப் பத்தியில் கூறியிருக்கிறார் ராமச் சந்திர குஹா.

மேலும் குஹா அந்தப் பத்தியில் எழுதிய போது, மோடி 2வது முறையாக ஆட்சியைப் பிடித்த போது உள்துறை அமைச்சருக்கு தன்னாட்சியான செயல் அனுமதிக்கப்பட்டது. பிறருக்கு இல்லை. முக்கியக் கொள்கைகள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்தில் முடிவு செய்யப்படுவதே. கொள்கைகள், திட்டங்கள் வெற்றியடைந்தால் பிரதமர் மோடிக்கு புகழ் போய்ச்சேரும், இல்லையெனில் ஏதேனும் தவறு நடந்து விட்டால் மற்றவர்கள்தான் பழியைச் சுமக்க வேண்டும். (அதாவது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள், ஜவஹர்லால் நேருவின் ஆவி, சுதந்திரவாதிகள், நகர்ப்புற நக்சல்கள், சமீபமாக கடவுள் மீதும் பழிபோடப்பட்டுவிட்டது).

இவ்வாறு அந்தப் பத்தியில் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x