

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை, பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் செய்துள்ளார். 60 கோடி மக்களின் வாழ்க்கைத் தரம் பிரதமர் மோடியால் முன்னேறியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் 24 மணிநேரமும் குடிநீர் கிடைக்கும் திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''பிரதமர் மோடிக்கு இன்று 70-வது பிறந்த நாள். அவர் நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து செய்ய முடியாததை, பிரதமர் மோடி 5 ஆண்டுகளில் ஏழைகளுக்குச் செய்துள்ளார். பிரதமர் மோடியின் முயற்சியால் 60 கோடி ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் இந்த நாட்டு மக்கள் மோடியைப் பிரதமராக்கினார்கள். ஏனென்றால், குஜராத் முதல்வராக இருந்தபோது, அவர் மக்களுக்குச் செய்த பணிகளைப் பார்த்து இந்த முடிவை மக்கள் எடுத்தார்கள்.
மோடி பிரதமராகப் பதவி ஏற்றபின், கோடிக்கணக்கான மக்கள், ஏறக்குறைய 60 கோடி ஏழைகள் மின்சார இணைப்பு பெற்றுள்ளார்கள், சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளார்கள். கழிப்பறை, வங்கிக் கணக்கு, நல்ல சுதாகார வசதிகள் கிடைத்துள்ளன.
நாட்டின் எல்லையில் நடந்த அத்துமீறல்களின்போது பிரதமர் மோடியின் உத்தரவால் நடந்த துல்லியத் தாக்குதலால் எல்லைப் பகுதி பலமாகியுள்ளது. உலக அளவில் இந்தியாவைப் பிரதமர் மோடி முன்னெடுத்துச் சென்றுவருகிறார்''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
காந்தி நகர் நகரம் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் 24 மணிநேரமும் குடிநீர் கிடைக்கும் திட்டத்தை குஜராத் அரசு செயல்படுத்தியுள்ளது. ரூ.229 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்துக்காக 27 கி.மீ. தொலைவுக்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இணைப்புக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முதலாக 24 மணிநேரமும் குடிநீர் வழங்கும் தொகுதியாக காந்தி நகர் மாறியுள்ளது.