Published : 17 Sep 2020 07:58 AM
Last Updated : 17 Sep 2020 07:58 AM

அடுத்த ஆண்டு இறுதியில் கரோனா தடுப்பூசி கிடைக்கும்: சுகாதார துறை நிபுணர்கள் கருத்து

புதுடெல்லி

அடுத்த ஆண்டு இறுதியில் பெரும்பான்மையான மக்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று சுகாதார துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் தயாரித்துள்ள 'கோவேக்ஸின்', குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த ஜைடஸ் கெடில்லா மருந்து நிறுவனம் தயாரித்துள்ள 'ஜைகோவ்-டி' கரோனா தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த செரம் இன்ஸ்டிடியூட், இந்தியாவில் பரிசோதனை செய்து வருகிறது. இந்த தடுப்பூசிக்கு 'கோவிட்ஷீல்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் கணிப்பு

சில நாட்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் நிருபர்களிடம் கூறும்போது, "அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் இந்தியாவில் கரோனா தடுப்பூசி தயாராகிவிடும். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த முதல் நபராக நானே தடுப்பூசியை போட்டுக் கொள்ள தயாராக உள்ளேன். அவசர தேவை உள்ளோருக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் கணிப்பின்படி அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் இந்தியாவில் கரோனா தடுப்பூசி வர்த்தரீதியாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் கணிப்பின்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் கரோனா தடுப்பூசி சந்தையில் கிடைக்கலாம். நோயாளிகள், முன்கள பணியாளர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடப்படும்.இந்த தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய கால அவகாசம் தேவைப்படும். அந்த வகையில் அடுத்த ஆண்டு இறுதியில்தான் பெரும்பான்மையான மக்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்கும். இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 130 கோடிக்கும் அதிகமாகும். நாடு முழுவதும் 130 கோடி இந்தியர்களுக்கும் கரோனா தடுப்பூசி போட குறைந்தபட்சம் 18 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை ஆகலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்பான தடுப்பூசி

பொது சுகாதார அறக்கட்டளை தலைவர் நாத் ரெட்டி கூறும்போது, "சந்தையில் பல்வேறு கரோனா தடுப்பூசிகள் அறிமுகம் ஆகலாம். இதில் எந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை கண்டறிந்து அந்த தடுப்பூசியை மக்களுக்கு போட வேண்டும். என்னுடைய கணிப்பின்படி இந்திய மக்கள் தொகையில் பாதி பேருக்கு கரோனா தடுப்பூசி போட ஓராண்டு வரை ஆகலாம். மருந்து சந்தையில் அறிமுகமாகி 6 மாதங்கள் முதல் 8 மாதங்கள் கழித்தே பெரும்பான்மையான மக்களுக்கு கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x