Published : 17 Sep 2020 07:50 AM
Last Updated : 17 Sep 2020 07:50 AM

மன உறுதி நிரம்பிய வீரர்களுடன் சீனாவுக்கு பதிலடி கொடுக்க லடாக் எல்லையில் இந்திய ராணுவம் தயார்

உடலளவிலும் மனதளவிலும் கடுமையான பயிற்சி பெற்ற வீரர்களுடன், கிழக்கு லடாக்கில் போர் புரிய ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் காரணமாக, கடந்த மே மாதம் முதலாகவே இரு நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி, கல்வான் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த பயங்கர மோதலை அடுத்து இந்த போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

இந்த சூழலில், சீன அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழில் நேற்று முன்தினம் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதில், “லடாக்கில் அடுத்து வரும் பயங்கர குளிர் காலங்களை தாக்குப் பிடித்து போர் செய்யும் திறன் இந்தியாவுக்கு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகிலேயே மிக உயரமான போர்க்களமாக கருதப்படும் சியாச்சின் பகுதியிலேயே போர் புரிந்து வெற்றி பெற்ற வரலாறு இந்திய ராணுவத்துக்கு உள்ளது. சியாச்சினை ஒப்பிடுகையில், கிழக்கு லடாக்கில் உள்ள பனி சூழ்ந்த மலை முகடுகளும், பள்ளத்தாக்கு பகுதிகளும் மிகச் சாதாரணமானவை.

அதுமட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக மனதளவிலும், உடலளவிலும் மிகக் கடுமையான பயிற்சிகளை பெற்ற வீரர்கள் இந்திய ராணுவத்தில் உள்ளனர். எந்த நேரத்திலும் போரை எதிர்கொள்ளும் திறனுடன் அவர்கள் இருக்கின்றனர். மேலும், கடும் பனியிலும் சண்டையிடும் அசாத்திய திறமை பெற்ற வீரர்கள் இந்திய ராணுவத்தில் அதிகம்.

இந்திய ராணுவ வீரர்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலேயே, சீனா இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு வருகிறது. சீனா ஒருவேளை போரை விரும்பினால், இந்தியாவின் மன உறுதிமிக்க ராணுவ வீரர்களை அவர்கள் நிச்சயம் சந்திப்பார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பி சீனா தந்திரம்

சண்டையிடாமல் எதிரியை வெல்வதே மிகச்சிறந்த போர்க் கலை என்று சன் சூ என்ற சீன ராணுவ வியூகதாரி கடந்த 6-ம் நூற்றாண்டில் தனது புகழ்பெற்ற ‘ஆர்ட் ஆப் வார்’ என்ற நூலில் கூறியுள்ளார். அதை கடைபிடிக்கிறது சீனா.கடந்த ஆகஸ்ட் 29-30-ம் தேதி பாங்காங் ஏரியின் தெற்கில் உள்ள ரெசாங் லா – ரெச்சின் லா முகடு பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனப் படையினர் ஈடுபட்டபோது அதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். பின்னர் பீரங்கிகள் மற்றும் காலாட் படை போர் வாகனங்களை அனுப்பினர். அதை இந்திய வீரர்கள் கடுமையாக எதிர்த்த போது, அவர்களை சாந்தப்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் பஞ்சாபி பாடல்களை ஒலிபரப்பப் தொடங்கினர். மேலும் இந்திய அரசியல்வாதிகளின் விருப்பங்களை நிறைவேற்ற குளிர் காலத்தில் இவ்வளவு உயரத்தில் நீங்கள் நிற்க வேண்டுமா என ஒலிபெருக்கிகள் மூலம் இந்தியில் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். இதுகுறித்து இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவர் கூறும்போது, “சீன ராணுவம் இதே ஒலிபெருக்கி தந்திரத்தை கடந்த 1962 மற்றும் 1967-ம் ஆண்டிலும் கடைபிடித்தது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x