

திருப்பதி: திருப்பதி மக்களவைத் தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ் (63), 2 வாரங்களுக்கு முன்பு கரோனா தொற்று அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான துர்கா பிரசாத் ராவ், அங்குள்ள கூடூரு தொகுதியில் முதன்முதலில் 1985-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு 1994, 1999, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் 2-ஆக பிரிந்த பின்னர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த துர்கா பிரசாத் ராவ், 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருப்பதி தொகுதியில் (தனி) போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தெலுங்கு தேசம் ஆட்சியின்போது ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.