

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் தாஹிர் உசேன் கைது செய்யப்பட்டார். பின்னர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர் இப்போது சிறையில் உள்ளார். இந்தக் கலவரம் தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் தாஹிர் உசேன், கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உட்பட 15 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அவர்கள் மீதான 17,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் நேற்று தாக்கல் செய்தனர். 2,600 பக்கங்களில் குற்றச்சாட்டுகள் மற்றும் ஆயிரக்கணக்கான இணைப்பு பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை 2 பெரிய இரும்பு பெட்டிகளில் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மேலும் சிலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.