

தமிழகத்தின் மேட்டுரில் பின்தங்கிய கிராமமான பாலமலைக்கு தார்சாலை அமைக்க நாடாளுமன்றத்தில் இன்று கோரிக்கை எழுப்பப்பட்டது. இதை மக்களவையில் திமுக எம்.பியான டாக்டர்.டி.என்.வி.செந்தில்குமார் பூஜ்ஜிய நேரத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
இதுகுறித்து 377 ஆவது விதியின் கீழ் தருமபுரி தொகுதி எம்.பி.யான டாக்டர்.செந்தில்குமார் பேசியதாவது:
‘‘சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுக்காவின் கொளத்தூர் ஒன்றியத்தில் பாலமலை உள்ளது. மிகவும் பின்தங்கிய இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக சுமார் பத்து கிலோமீட்டர் அளவிற்கு மண் சாலை மட்டுமே உள்ளது. அதில் 4 கி,மீ வனப்பகுதியிலும்மீதமுள்ள 6 கி.மீ பஞ்சாயத்து கட்டுபாட்டிலும் உள்ளது.
ஒரு பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் அடங்கிய இப்பகுதியில் 1360 குடும்பங்கள் வாழ்கின்றனர். இந்த மண் சாலையால் அக்குடும்பங்களை சேர்ந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் பாதிப்பிற்க உள்ளாகி வருகின்றனர்.
இவர்களின் பிரதான தொழிலாக விவசாயத்தை கொண்டு உற்பத்தி செய்யும் விவசாய விளைபொருட்கள் உள்ளன. இவற்றை மழைக் காலங்களில் அருகில் உள்ள சந்தைகளுக்கு கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகின்றார்கள்.
அதுமட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் ஆகியோர் இந்த சாலைகளில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவேபாலமலையில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தினை சரிசெய்ய வேண்டி உள்ளது.
இதற்காக, இங்கு பல ஆண்டுகளாக உள்ள மண் சாலையை உடனடியாகத் தரம் உயர்த்தி தார் சாலையாக மாற்றி தந்து அவர்களின் வாழ்வாதாரத்தை பேணிக்காக்க வேண்டியது மிகவும் அவசியம். ’’
இவ்வாறு அவர் கோரினார்.