எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் ஊடுருவல் முயற்சியை முறியடித்த பாதுகாப்புப் படை வீரர்கள் 5 தீவிரவாதிகளை நேற்று சுட்டுக்கொன்றனர்.

இந்த தகவலை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் என்.என்.ஜோஷி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

பண்டிபுரா மாவட்டம் குரேஸ் பகுதியில் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு எல்லைக்கு அப்பாலிருந்து காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதை அந்த பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது மோதல் மூண்டது. அப்போது 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.மோதல் நடந்த இடத்திலிருந்து தீவிரவாதிகள் வைத்திருந்த 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பூஞ்ச் பகுதியில் ஒருவர் காயம்

இதனிடையே, பூஞ்ச் மாவட்டம் பலகோட் பகுதியை யொட்டியுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாதுகாப்பு சாவடிகள் மீது பீரங்கிகள், துப்பாக்கிகளைக் கொண்டு பாகிஸ்தான் துருப்புகள் நேற்று சரமாரியாக தாக்குதல் நடத்தின. இதில் எல்லை கிராமத்தை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்தார்.

பதிலுக்கு இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இருதரப்புக்கும் இடையேயான மோதல் இன்னும் தொடர்கிறது.

குண்டுவீச்சில் பெஹ்ரூட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமது அஷ்ரப் (24) என்பவர் காயம் அடைந்தார். சில மாடுகளும் இதில் இறந்தன. காயம் அடைந்த அஷ்ரப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த மாதம் மட்டும் பாகிஸ்தான் படைகள் 23 முறை சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி தாக்குதல் நடத்தியுள்ளன. செப்டம்பர் 15-ம் தேதியிலிருந்து கணக்கிட்டால் இது 4-வது அத்துமீறல் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in