

கடந்த 6 மாதங்களாக இந்தியா-சீனா எல்லையில்ல எந்தவிதமான ஊடுருவலும் நடக்கவில்லை., ஆனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 47 ஊடுருவல்கள் இந்த காலகட்டத்தில் நடந்துள்ளன என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15-ம் தேதி இந்தியா-சீனா ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல்கள் நடந்ததாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் 6 மாதங்களாக எந்த ஊடுருவலும் இல்லை என்று மத்திய அரசு தெரிவி்த்துள்ளது.
எல்லைப்பகுதியில் நடந்த ஊடுருவல்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த 3 ஆண்டுகளில் 594 முறை பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 312 முறை வெற்றிகரமாக ஊடுருவல்கள் முறியடிக்கப்பட்டன.
ஆனால், கடந்த 6 மாதங்களாக இந்தியா-சீனா எல்லையில் எந்தவிதமான ஊடுருவல்களும் நடக்கவில்லை. கடந்த 6 மாதங்களில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 47 முறை ஊடுருவல்கள் நடந்துள்ளன” எனத் தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த நித்யானந்த் ராய், “ கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் 582 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 46 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2018 முதல் செப்டம்பர் 8-ம் தேதிவரை ல் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 76 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.
நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனை நடைமுறைப்படுத்தும் போது போலீஸார் தாக்குதலில் காயமடைந்த மக்கள், உயிரிழந்தவர்கள் குறித்த விவரத்தை தெரிவிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் “ நாடுமுழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனை நடைமுறைப்படுத்தும் போது உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் குறித்த எந்த விவரங்களும் அரசிடம் இல்லை.
லாக்டவுனை நடைமுறைப்படுத்தும் போது, அது தொடர்பாக வழங்கப்பட்ட புகார்கள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், துன்புறுத்தல் குறித்த முதல் தகவல் அறிக்கை, தனிநபர்கள் காயம், லாக்டவுனை நடைமுறைப்படுத்தும் போது, தனிநபர்கள் உயிரிழத்தல் போன்ற எந்த விவரங்களையும் மத்திய அரசு பராமரிக்கவில்லை.
போலீஸார் மற்றும் பொது அமைதி என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது பிரிவில் மாநில அரசுக்கு உரியதாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள்தான் எடுக்க முடியும், அவர்கள்தான் விவரங்களை பராமரிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.