கரோனா தொற்று 50 லட்சமாக அதிகரிப்பு; கடவுள் மீது பழிசுமத்தப் போகிறதா?-மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

காங்கிரஸ் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா: கோப்புப்படம்
காங்கிரஸ் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா: கோப்புப்படம்
Updated on
2 min read

இந்தியாவில் கரோனா வைரஸ் 50 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், எப்படி கரோனா பரவலை கட்டுப்படுத்தப்போகிறீர்கள் என்பதை மக்களுக்குச் சொல்ல வேண்டும். அல்லது 50 லட்சமாக அதிகரித்ததற்கும் கடவுள் மீது பழிசுமத்தி மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக்கழிக்கப் போகிறதா என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 90 ஆயிரத்து 123 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 50 லட்சத்து 20 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 1,290 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு 82 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கடந்த 5-ம் தேதி 40 லட்சத்தை எட்டிய நிலையில், அடுத்த 11 நாட்களில் 50 லட்சமாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி 20 லட்சத்தையும், 20-ம் தேதி 30 லட்சத்தையும், கடந்த 5-ம் தேதி 40 லட்சத்தையும் கரோனா தொற்று எட்டியிருந்தது.

கரோனா பாதிப்பு இந்தியாவில் 50 லட்சத்தைக் கடந்துள்ளது குறித்து மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது. அந்தக் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:

''கரோனா வைரஸின் மகாபாரதம் தொடங்கிவிட்டது. ஆனால், மோடி அரசுதான் இழந்துவிட்டது. கரோனா வைரஸ் குறித்த சில உண்மைகள் தேவை. பிரதமர் மோடி பதில் அளிப்பாரா?

  • நாள்தோறும் கரோனா தொற்றில் உலக அளவில் இந்தியா முதலிடம் (90,123).
  • கரோனாவில் உயிரிழப்பு நாள்தோறும் அதிகம். உலக அளவில் இந்தியா முதலிடம்(1,290).
  • கரோனா வைரஸ் தொற்று இரட்டிப்பாக இருக்கிறது. உலக அளவில் இதிலும் முதலிடம் (31 நாட்களில் இரு மடங்கு).
  • ஒட்டுமொத்த கரோனா தொற்றில், உலக அளவில் இந்தியா 2-வது இடம்.
  • கரோனாவுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் இந்தியா உலக அளவில் 2-வது இடம் (9,95,933).
  • கரோனாவில் உயிரிழந்தவர்களில் உலக அளவில் 3-வது இடம் (82,066).

கரோனா வைரஸ் பரவல் எப்போது கட்டுப்படுத்தப்படும் என்பதை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு கூற வேண்டும். அல்லது கரோனா வைரஸ் பரவல் அதிரிப்புக்கும் கடவுள் மீது பழிபோட்டுவிட்டு, பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடுமா?''

இவ்வாறு ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in