

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆயிரமாக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 90 ஆயிரத்து 123 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 50 லட்சத்து 20 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 5-ம் தேதி 40 லட்சத்தை எட்டிய நிலையில், அடுத்த 11 நாட்களில் 50 லட்சமாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி 20 லட்சத்தையும், 20-ம் தேதி 30 லட்சத்தையும், கடந்த 5-ம் தேதி 40 லட்சத்தையும் கரோனா தொற்று எட்டியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கரோனாவிலிருந்து குணமடைந்த நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து பிரேசிலும், அமெரிக்காவும் இருக்கின்றன என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
அதேசமயம், கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் தற்போது இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. கரோனாவில் அதிகமாக உயிரிழப்பைச் சந்தித்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது.
ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 39 லட்சத்து 42 ஆயிரத்து 361 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம 78.28 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்து 95 ஆயிரத்து 933ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 82 ஆயிரத்து 66 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்போர் வீதம் 1.64 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 515 பேர் உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 30 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 92 ஆயிரத்து 174 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 68 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 8 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 46 ஆயிரத்து 806 ஆக குறைந்துள்ளது.
டெல்லியில் கரோனாவில் நேற்று மட்டும் 36 பேர் உயிரிழந்ததால், ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,896 ஆக அதிரித்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் நேற்று 17 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு 3,244 ஆக அதிரித்துள்ளது. கரோனாவில் 16,357 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் கரோனாவில் 98 ஆயிரத்து 555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நேற்று 216 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த எண்ணிக்கை 7,481 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31,226 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 466 ஆகவும் அதிகரித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கரோனாவில் 92,353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு நேற்று மட்டும், 69 பேர் உயிரிழந்ததையடுத்து, 5,041 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.