

பெங்களூருவில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமமுகபொதுச் செயலாளர் சசிகலா வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி27-ம் தேதி விடுதலை செய்யப் படலாம் என கர்நாடக சிறைத்துறை அறிவித்துள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோ ருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து சசிகலா உள்ளிட்ட மூவரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சசிகலா தன்கணவர் ம.நடராஜன் மற்றும் உறவினரின் மரணம் ஆகிய காரணங்களுக்காக 17 நாட்கள் வெளியே வந்தார். மேலும் சசிகலா சிறையில் விதிமுறைகளை மீறியதாக அப்போதைய டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். இது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் சிறைத்துறையை நிர்வகிக்கும் கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா நியமிக்கப்பட்டார். இதனால் நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவின் விடுதலை முன்கூட்டியே இருக்காது என தகவல் வெளியானது.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி, ‘‘சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார்?'' என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார். இதற்கு பெங்களூரு மத்திய சிறையின் கண்காணிப்பாளர் லதா, ‘‘தண்டனை கைதி எண் 9234 சசிகலா 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதிவிடுதலையாக வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை சசிகலா ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தத் தவறினால் 2022-ம் ஆண்டு பிப்.27-ம் தேதி விடுதலையாக வாய்ப்புஉள்ளது. இந்த விடுதலை தேதி, சசிகலா பரோலில் வெளியே சென்றால் மாறும் வாய்ப்பு உள்ளது'' என பதில் அளித்துள்ளார்.
அக்டோபரில் விடுதலை?
இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், “கர்நாடக சிறைத்துறை சொல்லி யிருக்கும் தேதி உத்தேச தேதி தானே தவிர, உறுதியான தேதிஎன கூற முடியாது. சிறைத்துறையின் விதிமுறையில் வழங்கப்பட்ட அரசு விடுமுறை நாட்களை கழித்தால், சசிகலா வரும்அக்டோபர் மாதத்திற்குள் விடுதலையாக வாய்ப்பு உள்ளது.
சசிகலாவை முன் கூட்டியே விடுதலை செய்வதற்கான வேலைகளை நாங்கள் மேற்கொண்டுவருகிறோம். அதேபோல அபராதத்தை செலுத்த தயாராக உள்ளோம்” என்றார்.
முன்கூட்டியே விடுதலை
சுதாகரனும், இளவரசியும் சசிகலாவுக்கு முன்னதாகவே விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித் துள்ளனர். சுதாகரன் இவ்வழக்கில் ஏற்கெனவே 126 நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார். இந்த 126 நாட்களை கழித்தால் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் சுதாகரன் விடுதலை ஆவார். அதேபோல இளவரசியும் ஒரே ஒரு முறை மட்டுமே பரோலில் ஒருவாரம் வெளியே வந்துள்ளார். எனவே அவரும் முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பிருக்கிறது. இருவர் தரப்பிலும் அபராதம் செலுத்த தயாராக உள்ளனர்.