

பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத் நகரில் 70 ஆயிரம் மரக்கன்றுகளை நட அம்மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை செப்டம்பர் 17-ம் தேதி (நாளை) கொண்டாடுகிறார். இதையொட்டி, நாடு முழுவதும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு பாஜகவினர் ஏற்பாடுசெய்துள்ளனர்.
இதனிடையே, கரோனா பரவல் உள்ளதால் இந்த நிகழ்ச்சிகளை பாதுகாப்பான முறையிலும் மக்களுக்கு பயன்படும் வகையிலும் நடத்துமாறு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சூரத் நகர் முழுவதும் மரக்கன்றுகளை நடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து சூரத் மாநகராட்சி துணை மேயர் நீரவ் ஷா கூறும்போது, "பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை குறிக்கும் விதமாக, சூரத்தில் உள்ள பல் வேறு பகுதிகளில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. 15 நாட்களுக்கு முன்பாகவே இந்தப் பணியை தொடங்கிவிட்டோம்.
விரைவில் அனைத்து மரக் கன்றுகளும் நடப்பட்டுவிடும். இந்தப் பணியில் மாநகராட்சி நிர்வாகம் மட்டுமின்றி பல்வேறு தொழில் நிறுவனங்களும், அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன" என்றார்.