அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது: பாஜக கூட்டணியில் உள்ள கட்சி எதிர்ப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும், வேளாண் துறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கிலும் கொண்டுவரப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது.

இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது எனக் கூறி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிரோன் மணி அகாலி தளம் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. இருப்பினும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேறியது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா-2020 திங்கள்கிழமை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. 1995-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தில் தற்போது கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் மூலம், வெங்காயம், உருளைக்கிழங்கு, தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதிலும், இருப்பு வைப்பதிலும் எந்தவிதமான கட்டுப்பாடும் இனிமேல் விதிக்கப்படாது.

அரசின் அமைப்புகள் அதிகமான தலையீடுகளை உண்டாக்குமோ என்ற அச்சமின்றி தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் வேளாண்துறையில் அதிகமான முதலீடுகளை செய்ய முடியும் என்பதாகும்.

இந்த மசோதா மீது நேற்று விவாதம் நடந்தது. அப்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிரோன் மணி அகாலி தளம் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது.

அந்தக் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் பேசுகையில், “இந்த மசோதா மீது விவசாயிகளுக்கு இடையே தவறான புரிதலும், சந்தேகங்களும் இருக்கின்றன. இந்த மசோதா மட்டுமல்லாமல் மற்ற இரு மசோதாக்கள் மீதும் விவசாயிகளுக்கு நம்பிக்கையில்லை.

மத்திய அரசு இந்த 3 மசோதாக்களையும் திரும்பப் பெற்று விவசாயிகளின் கவலையைக் களைந்தபின், இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இது விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப், ஹரியாணாவில் விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அமர் சிங் பேசுகையில், “இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது, ஏழைகளுக்கு எதிரானது” என விமர்சித்தார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.சுகதா ராய், கல்யாண் பானர்ஜியும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். சுகாதா ராய் பேசுகையில், “ இந்த அவசரச் சட்டத்தை ஏன் விரைவாகக் கொண்டுவர வேண்டும், அதற்கு மாற்றாக இந்த மசோதாவை நிறைவேற்ற ஏன் இவ்வளவு அவசரத்தை மத்திய அரசு காட்டுகிறது எனப் புரியவில்லை. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளுக்கான துறையில் நுழைய இது வாய்ப்பளிக்கும்” எனத் தெரிவித்தார்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. குமார் தன்வாஷ் அலி இந்த மசோதா விவசாயிகளுக்கு எதிரானது. வேளாண் பொருட்களைப் பதுக்குவோரை அங்கீகரிக்கும் மசோதா எனக் குற்றம் சாட்டினார்.

திமுக எம்.பி. கதிர் ஆனந்த் இந்த மசோதாவை எதிர்த்துப் பேசினார்.

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்.பி. கவுசலேந்திர குமார் இந்த மசோதாவை ஆதரித்துப் பேசினார். அவர் பேசுகையில், ''இந்த மசோதா விவசாயிகளுக்கு மிகுந்த பலன் அளிக்கும். குறைந்தவிலையில் அவர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

பாஜக எம்.பி. பிபி சவுத்ரி பேசுகையில், ''இந்த மசோதா விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நுகர்வோர்களுக்கும் பயனளிக்கும் மசோதா. வேளாண் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த தொலைநோக்குடன் எடுக்கப்பட்ட முடிவு” எனத் தெரிவித்தார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி சஞ்சீவ் குமார் சிங்காரி, பிஜூ ஜனதா தளம் எம்.பி. பாரத்ரூஹரி மகதப் ஆகியோர் இந்த மசோதாவை ஆதரித்துப் பேசினர்.

இறுதியில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை ஆதரவில் நிறைவேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in