

நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப் பதற்கு புதிய நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டத் துறை அமைச்சராக ரவிசங்கர் பிரசாத் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப் படும். தூக்கு தண்டனையை ரத்து செய்வது குறித்து பரிசீலிக் கப்படும்” என்றார்.
வாஜ்பாய் அரசில் வெவ்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் உடையவர் ரவிசங்கர் பிரசாத். பிஹார் மாநிலம் பாட்னா வில் 1954-ம் ஆண்டு பிறந்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில இந்திய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்து பணியாற்றிய ரவிசங்கர், ஜெயப்பிரகாஷ் நாராய ணன் இயக்கத்தில் சேர்ந்து இந்திராவுக்கு எதிராகப் போராடியவர். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டார்.
பிஹார் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பாக லாலுவுக்கு எதிரான பொதுநல வழக்கில், பிரதான வழக்கறிஞராக ரவிசங்கர் பிரசாத் பணியாற்றினார். ஒருமுறை ஹவாலா வழக்கில் சிக்கிய அத்வானிக்காகவும் ஆஜராகி வாதாடினார். சர்ச்சைக்குரிய அயோத்தி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கிலும் பாஜகவுக்காக வாதாடினார்.
2000-ம் ஆண்டில் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் சட்டம் மற்றும் நீதித் துறைக்கும் பொறுப்பு வகித்தார். அதன்பிறகு அவர் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச் சராகவும் இருந்துள்ளார்.
பாஜக ஆட்சியில் இல்லாத 10 ஆண்டுகளில் கட்சியின் நிலைப் பாட்டை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் எடுத்துக்கூறும் முகமாக ரவிசங்கர் பிரசாத் திகழ்ந்தார். 3-ம் முறையாக 2012-ல் மாநிலங்களவைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.
ரவிசங்கர் பிரசாத்தின் சகோதரி அனுராதா பிரசாத் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ஐ.பி.எல். தலைவருமான ராஜீவ் சுக்லாவின் மனைவியாவார்.
2ஜி அலைக்கற்றை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட நாடளுமன்ற கூட்டுக் குழுவில் பாஜக உறுப்பினர்களில் ஒருவராக ரவிசங்கர் பிரசாத் இருந்தார். எனவே, 2ஜி அலைக்கற்றையில் நடந்த ஊழலை கிளறி அதில், பல காங்கிரஸ் தலைவர்களையும் சிக்க வைப்பதும், நாட்டில் உள்ள நிலுவை வழக்குகளை முடிப் பதும் ரவிசங்கர் முன்புள்ள சவால்களாகும்.