ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நாட்களை அதிகரிக்க வாய்ப்பில்லை: கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் நரேந்தர்சிங் தோமர் தகவல்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தகுதி வேலை நாட்களை அதிகரிக்கிற எண்ணம் இல்லை என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் எம்.பியான சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்திரசிங் தோமர் இன்று மக்களவையில் அளித்த பதிலில் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தனது பதிலில், ‘‘நாடு முழுவதிலும் இத்திட்டத்தின் சராசரி வேலை நாட்கள் ஏப்ரலில் 12, மே 17, ஜூனில் 6, ஜூலையில் 14, ஆகஸ்டில் 12 என்ற அளவில் இருந்துள்ளன

இந்த சராசரி தமிழகத்தில் ஏப்ரலில் 4, மே 7, ஜூனில் 9, ஜூலையில் 10, ஆகஸ்டில் 8 என்ற அளவில் இருந்துள்ளன. மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தில் தகுதி வேலை நாட்களை 100 நாட்களில் மேலும் அதிகரிப்பதற்கான முன் மொழிவு ஏதும் அரசின் தரப்பில் இல்லை.’’ எனத் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் அளித்த பதிலில் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கருத்து தெரிவித்த மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘நாடு முழுக்க வேலையிழப்புகள் கோடிக்கணக்கில் ஏற்பட்டுள்ளன. புலம் பெயர் தொழிலாளர் பலர் சொந்த கிராமங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையிலும் ஊரக வேலைத் திட்ட நாட்களை அதிகரிக்கிற எண்ணம் இல்லை என்ற அரசின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது. 200 நாட்களாக தகுதி வேலை நாட்களை உயர்த்த வேண்டும் என விவசாய அமைப்புகளும், இடதுசாரிக் கட்சிகளும் கோரிக்கை எழுப்பி வருகின்றன.

இக்கோரிக்கையை அரசு பரிசீலிக்க மறுப்பது கிராமப் புற மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். தமிழக சராசரி தேசிய சராசரியை விடக் குறைவாக இருந்திருக்கிறது/

எனவே, தமிழக அரசு விரைந்து ஊரக வேலைத் திட்டத்தை விரிவாக்க வேண்டும்.’’ எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in