

கடந்த மூன்று வருடங்களில் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்த விவரங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, முக்கிய தகவல்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம் வருமாறு:
கோவிட்-19 நோயாளிகளுக்கான புதிய சுகாதாரத் திட்டம் என்னும் தலைப்பில் பதிலளித்த அவர், சுகாதாரப் பணியாளர்களுக்காக ரூ 50 லட்சம் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், பொது மக்களுக்கு கோவிட் சிகிச்சையைத் தவிர, ஒரு குடும்பத்துக்கு வருடத்துக்கு ரூ 5 லட்சம் காப்பீட்டு திட்டமும் செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். கோவிட் சிறப்பு சிகிச்சை தொகுப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்திய மருத்துவக் குழு அளித்துள்ள தகவலின் படி, கடந்த மூன்று வருடங்களில் 47 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அஷ்வினி குமார் சௌபே கூறினார்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்களுடனும், கோயமுத்தூரில் உள்ள கற்பகம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 150 இடங்களுடனும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்களுடனும், மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 150 இடங்களுடனும், சென்னையில் உள்ள இ எஸ் ஐ சி மருத்துவ கல்லூரிக்கு 100 இடங்களுடனும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள சேலம், மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.