Last Updated : 11 Sep, 2015 08:01 PM

 

Published : 11 Sep 2015 08:01 PM
Last Updated : 11 Sep 2015 08:01 PM

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க வலியுறுத்துகிறது ம.பி. சர்வதேச மாநாடு

அரசு நிர்வாகங்கள் மூலமாக உள்நாட்டிலும், தூதரகங்கள் மூலமாக வெளிநாட்டிலும் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று மத்தியப் பிரதேசம் - சர்வதேச இந்தி மாநாடு வலியுறுத்துகிறது.

10-வது சர்வதேச இந்தி மாநாடு, மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெற்று வருகிறது.

நிர்வாகங்களில் இந்தி பயன்பாடு: ம.பி. முதல்வர் விருப்பம்

மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசும்போது, "அரசு நிர்வாகங்களுக்கும் சாமானிய மக்களுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பது இந்தி மொழியை எளிமையான முறையில் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமே.

சுதந்திரத்துக்கு முன்பு நிர்வாகத்தில் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டதால், நிர்வாகங்களுக்கும் மக்களுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் இடைவெளி இருந்தது. அதை இன்னமும் பின்பற்றக் கூடாது. மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகரிப்பதற்கு எளிய இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும்.

இது, ஒரு மொழிக்கு எதிரான கருத்து அல்ல. ஆங்கிலம் என்பது இந்தியாவின் சாமானிய மனிதனுக்கு ஒருபோதும் நெருக்கமானதாக இருக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார் சவுகான்.

இவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சத்யநாராயணன் ஜாதியா, இந்தி மொழி தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதாக குறிப்பிட்டார்.

"இஸ்ரோ போன்ற நிறுவன அமைப்புகளின் அதிகாரிகள் மட்டத்தில் இந்தி மொழியின் பயன்பாடு என்பது 92 சதவீத அளவில் உள்ளது. இது, மக்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது."

வெளியுறவு நடவடிக்கைகளில் இந்தி பயன்பாட்டை அதிகரிக்க...

உள்நாட்டு நிர்வாகங்களில் மட்டுமின்றி, வெளியுறவுக் கொள்கைகள், தூதரகங்கள் மூலமாக இந்திப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்தியுள்ளது.

மாநிலங்களவை எம்.பி. சத்யவ்ராத் சதுர்வேதி தலைமையில் நடந்த கருத்தரங்கில் பிரபல பத்திரிகையாளர் கர்பான் குர்பான் அலி பேசும்போது, "இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் கடந்த ஓராண்டாக இந்தி மொழி பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. அறிக்கை முதலான ஆவணங்கள் இந்தியிலேயே இயற்றப்படுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் அரசு நிகழ்ச்சியில் இந்தியில்தான் அதிகம் பேசுகின்றனர். வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் இதைப் பின்பற்ற வேண்டும்.

உலகின் 177 நாடுகள் ஆதரவுடன் உலக யோகா தினம் உருவானது. இதைப் பார்க்கும்போது, 129 நாடுகளின் ஆதரவு கிடைத்தாலே ஐ.நா.வில் இந்தி அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது" என்றார் அவர்.

இந்தியின் மகத்துவம்: மோடி பேச்சு

முன்னதாக, இந்த மாநாட்டை நேற்று தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசும்போது, "எனது தாய்மொழி குஜராத்தி தானே தவிர இந்தி அல்ல. நான் சிறுவனாக இருந்தபோது தேநீர் விற்பதற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுடன் உரையாட நேரிட்டது. அவர்களுக்கு குஜராத்தி தெரியாது. அவர்களிடம் தேநீர் விற்கும்போது இந்தி மொழியைக் கற்றேன்.

ஒருவேளை எனக்கு இந்தி தெரியாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கையில் என்ன நேர்ந்திருக்கும் என்று சில நேரங்களில் நான் யோசிப்பது உண்டு. எந்த ஒரு மொழியை அறிந்துகொள்வதால் கிடைக்கும் பலம் பற்றி நான் அறிவேன்" என்றார் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x