நடிகர் சூர்யா கருத்திற்கு மட்டும் உடனடியாக எதிர்வினை புரியும் நீதித்துறை –மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த சு.வெங்கடேசன்

நடிகர் சூர்யா கருத்திற்கு மட்டும் உடனடியாக எதிர்வினை புரியும் நீதித்துறை –மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த சு.வெங்கடேசன்
Updated on
1 min read

நடிகர் சூர்யா கருத்திற்கு மட்டும் நீதித்துறை உடனடியாக எதிர்வினைப் புரிவதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன் எடுத்துரைத்தார். இதை அவர் இன்று மக்களவையில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இது குறித்து மதுரை எம்.பி.யான சு.வெங்கடேசன் இன்றைய பூஜ்ஜியம் நேரத்தில் பேசியதாவது: அனிதா முதல் ஜோதி ஸ்ரீதுர்கா வரை பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்தின் துயரத்திலிருந்து மீளாவேதனையுடன் கேட்கிறோம்.

நீட் எனும் தேசிய தகுதித் தேர்வினை எப்பொழுது கைவிடுவீர்கள்? நீட் எனும் திரிசூலத்தில் மூன்று முனை இருக்கிறது.

ஒரு முனை, மாநில அரசின் கல்வி முறையையும், மாநில உரிமையையும் குத்திக்கிழிக்கிறது, மற்றொரு முனை டீச்சிங்கை கொன்று, கோச்சிங்கை கொண்டாடுகிறது,

மூன்றாவது முனை மாணவர்களின் உளவியலை சிதைத்து தற்கொலைக்குத் தள்ளுகிறது. இந்த கொடிய கொலைக்கருவியை இன்னும் எத்தனை குழந்தைகளின் மரணத்துக்கு பின் கீழே போடுவீர்கள்?

மருத்துவ மாணவர் சேர்க்கை சம்பந்தமாக தமிழக சட்டப்பேரவை ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பினார். அரசமைப்புச் சட்டத்தின்படி மசோதாவை திருப்பி அனுப்பினால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

ஆனால் இன்றுவரை அந்த காரணம் தெரிவிக்கப்படவில்லை. இது பற்றி நீதித்துறை ஆளுமைகள் கேள்வி எழுப்புவதில்லை. ஆனால் திரைக்கலைஞர் சூர்யா கருத்துகூறினால் உடனே எதிர்வினை புரிகிறார்கள்.

நீதியும், தேர்வும், மனுநீதியின் சாயலாகவும், சாரமாகவும் மாறிவிடக்கூடாது என்பதால் கேட்கிறோம். நீட்டினை கைவிடுங்கள்!. கைவிடுங்கள்! கைவிடுங்கள்! இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in