

கரோனா தொற்றானது உடல்ரீதியாக மட்டுமல்லாது, பொருளாதார ரீதியிலும் பலரையும் நிலைகுலைய வைத்துள்ளது. இருப்பினும் பேரிடர் துயரங்களுக்கு மத்தியில் ஆங்காங்கே தங்களால் முடிந்தளவுக்கு உதவும் உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் சலூன் கடை நடத்தும் கோபி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தனது சலூனில் இலவசமாக முடி திருத்தம் செய்து அனுப்புகிறார்.
எர்ணாகுளம் குமாரன் ஆசான் சாலையில் இருக்கிறது கிங் ஸ்டைல் முடிதிருத்தகம். இங்கு இப்போது தினமும் குழந்தைகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சற்றும் முகம் சுளிக்காமல் அனைவருக்கும் இலவசமாக முடிவெட்டி விடுகிறார்கள் கோபியும், அவரது கடைப் பணியாளர்களும். இந்த சலூனில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்யப்படுகிறது. கரோனாவால் மக்கள் பொருளாதாரரீதியாக வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் குழந்தைகளின் நலனை முன்னிறுத்தி இப்படி ஒரு சேவையைச் செய்கிறார் கோபி.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கோபி, “இப்போது பெருவாரியான மக்கள் வருமானம் பாதிக்கப்பட்டு கடினமான சூழலில் இருக்கிறார்கள். கரோனா காலத்தில் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் ஒருபக்கம் இருக்க, பணம் கையில் இல்லாமல் எப்படி வீட்டைவிட்டு வெளியே வருவது என்னும் தயக்கத்துடனும் பலர் வெளியே வருவதில்லை. இப்படியான சூழல் நெருக்கடியில் மக்களுக்கு நம்மால் ஆன வகையில் ஏதாவது உதவவேண்டும் எனத் தோன்றியது. சலூன் கடைக்காரனான நான் தேர்ந்தெடுத்த பாதைதான் இலவசமாக முடிவெட்டுவது.
கரோனா பரவலின் தொடக்கத்தில் சலூன் கடைகள் மூடப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சலூன் கடைகள் மீண்டும் திறந்தபோது வழக்கம்போல் முடிவெட்ட ஆட்கள் கூட்டம் இல்லை. நான்கூடக் கரோனா அச்சத்தின் காரணமாக மக்கள் வரவில்லையோ என நினைத்தேன். வாடிக்கையாளர்களிடம் நெருங்கிப் பேசியபோதுதான் கரோனாவால் ஏற்பட்ட பணப் பிரச்சினைதான் காரணம் எனத் தெரியவந்தது. ஆனால், குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் முடிவெட்டா விட்டால் சளி பிடித்துவிடும். அதன்பின்னே இருமலும் வரும். இப்படியான சூழலில்தான் அவர்களுக்கு இலவசமாக வெட்டிவிட்டால் என்ன? என்று முடிவெடுத்து முதலில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக முடி வெட்டினேன்.
இப்போது அந்த வயது வரம்பை 14 ஆகக் கூட்டியிருக்கிறேன். ஏழைக் குழந்தைகள் இந்தச் சலுகையைப் பயன்படுத்துகின்றனர். அதேநேரம் கரோனாவால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படாத வாடிக்கையாளர்கள் எனது சேவைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துவிட்டு, பணமும் கொடுக்கின்றனர். குழந்தைகளுக்கு மட்டுமில்லை... மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களும் ஏழைகளாக இருக்கும்பட்சத்தில் இலவசமாகவே முடி திருத்தம் செய்து அனுப்புகிறோம்.
எர்ணாகுளத்தில் எனக்கு 3 சலூன்கள் இருக்கின்றன. அதில் இந்த ஒரு கடையில்தான் இலவச சேவைகளை அமல்படுத்தியிருக்கிறேன். மற்ற கடைகளில் இருந்து வருமானம் வந்துவிடும் என்பதால் இங்கிருக்கும் பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுப்பதிலும் சிக்கல் இல்லை. கரோனாவில் இருந்து இயல்புநிலை திரும்பும்வரை இந்த சேவையை நிறுத்தப் போவதில்லை” என்றார்.