

அரசுப்பணிகளில் முஸ்லிம்கள் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளனர், அரசு வேலைகளில் முஸ்லிம்கள் ஊடுருவுகின்றனர், இது ஒரு ஜிகாத் என்று சுதர்ஷன் டிவி சேனல் ‘வெறித்தனமான’ விவாத நிகழ்ச்சியை நடத்தியதைக் கண்டித்த உச்ச நீதிமன்றம் ஊடகங்களுக்கு சுயக் கட்டுப்பாடு அவசியம் என்று வலியுறுத்தியது.
இந்த சுதர்ஷன் டிவி நிகழ்ச்சியை எதிர்த்து மேற்கொண்ட மனு மீதான விசாரணை செவ்வாயன்று உச்ச நீதிமன்ற நீதிபதி டிஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்த்து. அப்போது தொலைக்காட்சி மீடியாக்கள் விவாத நிகழ்ச்சிகளை நடத்தும் விதம் கவலையளிக்கிறது என்றும் அவதூறான அத்தனை விஷயங்களும் பேசப்படுகின்றன என்றும் கண்டித்தது.
ஒரு சமூகத்தினர் சிவில் சர்வீஸுக்குள் நுழைவது பற்றிய இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பாருங்கள் அது எவ்வளவு வெறித்தனமாக இருக்கிறது என்பது தெரியும்.
விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் விஷயம் எவ்வளவு மோசமாக உள்ளது. எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம்கள் சிவில் சர்வீஸ்களில் ஊடுருவுகின்றனர், அதை கண்காணிக்க வேண்டும் என்கின்றனர், என்று நீதிபதிகள் சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா, கேஎம் ஜோசப் ஆகியோர் கவலை வெளியிட்டனர்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பத்திரிகை சுதந்திரம் என்பது உச்சபட்சமானது, எனவே அதைக் கட்டுப்படுத்துவது ஜனநாயக விரோதம் என்றார்.
சுதர்ஷன் டிவிக்காக ஆஜரான முத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், அந்த குறிப்பிட்ட சுதர்ஷன் டிவி நிகழ்ச்சி தேசியப் பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு நிகழ்ச்சியே என்றார்.
இதனை மறுத்த நீதிபதிகள், “உங்கள் கட்சிக்காரர் தேசத்துக்கு சேவை புரியவில்லை, தேசத்துக்கு கேடுதான் விளைவிக்கிறார், பன்முக பண்பாடு கொண்ட தேசம் இந்தியா என்பதை உங்கள் கட்சிக்காரர் மறுக்கிறார். எனவே சுதர்ஷன் டிவி தன் சுதந்திரத்தை எச்சரிக்கையுடன் கையாள்வது நல்லது.” என்றார்.
மேலும் இது தொடர்பான விசாரணை தொடரும் என்று தெரிகிறது.