

கர்நாடகாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்டவருடன் கர்நாடகா வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா இருப்பதான புகைப்படம் அங்கு பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் ட்விட்டரில், “போதைமருந்து தாதா ராகுல் தான்ஷேவுடன் அமைச்சர் ஆர்.அசோகா இருப்பதான புகைப்படங்கள், ஏதோ எதேச்சையான சந்திப்பு போல் தெரியவில்லை மாறாக நெருங்கிய உறவு இருப்பதையே காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளது.
மேலும் காங்கிரஸ் குற்றம்சாட்டும்போது, மற்றக் கட்சிக்காரர்களை கடுமையாக குற்றம்சாட்டி தங்கள் தரப்புக் குற்றங்களை மறைத்துக் கொள்ளும் பாஜகவின் தலைவர்கள் முதலில் விசாரணையை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஏதோ ஒரு நிகழ்ச்சியில் வருவாய் அமைச்சர் அசோகாவும் போதை மருந்து மன்னன் ராகுல் தான்ஷேவும் கலந்து கொண்ட புகைப்படத்தைத்தான் காங்கிரஸ் கூறுகிறது.
மேலும் தான்ஷேவும், அமைச்சரும் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை ஊட்டி விட்டுக் கொண்டிருக்கின்றனர். வழக்கம் போல் அவரை தெரியாது என்று பாஜக அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார்
“என் தொகுதியில் கட்சிக்காரர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றேன். ஒரு பிரபலஸ்தர் ஒரு இடத்துக்குச் செல்லும் போது நிறைய பேர் படங்கள் எடுத்துக் கொள்வது வழக்கம்தான். உடனே தொடர்பு படுத்தி விட முடியுமா?
மேலும் கரோனா வைரஸினால் தான் 4 மாத காலமாக எங்கும் செல்லவில்லை என்றும் எனவே இந்தப் புகைப்படம் அதற்கு முன்பாக எடுக்கப்பட்டிருக்கலாம் என்றார் அசோகா.