

இன்று இரண்டாம் நாள் மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் காங்கிரஸ் எம்.பியான சாயா வர்மா, தாம் மக்களவையில் அமர்ந்தபடி பேசுவதாகக் குறிப்பிட்டார். இதை கேட்ட மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, சாயாவின் எம்.பி பதவி மேலவையில் இருந்து கீழவைக்கு அவரது கட்சியால் குறைக்கப்பட்டு விட்டதாக நகைச்சுவையாகப் பேசியது ரசிக்கப்பட்டது.
கரோனா பரவல் சூழலில் நேற்று முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கூடியது. இதன் இரண்டாது நாளில் காலை 9.00 மணி முதல் மாநிலங்களவை நடைபெற்றது.
இதில் சமூக விலகல் கடைப்பிடிப்பில் இடப்பற்றாக்குறையால், மாநிலங்களவையின் எம்.பிக்கள் மக்களவை மற்றும் அதன் பார்வையாளர் மாடங்களிலும் அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றத்தினால் அவர்கள் அவை நடவடிககிகளையும் காணும்படி பெரிய அளவிலான டிவி திரைகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று காலை பூஜ்ஜிய நேரத்தில் காங்கிரஸ் எம்.பியான சாயா வர்மா பேசினார். அப்போது அவர், தன் அடையாளத்தை அவை தலைவருக்கு உணர்த்த வேண்டி செய்த அறிமுகம் நகைச்சுவையாக மாறியது.
இது குறித்து எம்.பியான சாயா வர்மா கூறும்போது, ’நான் மக்களவையில் அமர்ந்திருக்கும் மாநிலங்களவையின் காங்கிரஸ் உறுப்பினர் சாயா வர்மா. கரோனா பரவலால் இங்கு அமர்த்தப்படிருக்கிறேன்.’ எனத் தெரிவித்தார்.
இதைகேட்டு நகைச்சுவை ரசனையுடன் பேசிய அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, ‘ஆம்! மேலவை உறுப்பினரான நீங்கள் குலாம்நபிஜி, அனந்த் சர்மாஜியால் பதவி குறைப்பு செய்யப்பட்டு கீழவையில் அமர்த்தப்பட்டுள்ளீர்!’ எனத் தெரிவித்தார்.
இதை கேட்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் சிரித்து விட்டனர். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவரான குலாம்நபி ஆசாத் மற்றும் துணைத்தலைவரான அனந்த் சர்மாவும் கூட இதை கேட்டு ரசித்தபடி சிரித்தார்.
ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.பிக்களுக்கு இடையே பெரும்பாலும் சூடான விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த சூழலில் மாநிலங்களவையில் தலைவர் நாயுடுவின் நகைச்சுவையால் அனைத்தையும் மறந்த எம்.பிக்கள் இன்று மனம்விட்டு சிரித்து மகிழ்ந்தனர்.
பாஜக எம்.பியாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த தலைவர் வெங்கய்ய நாயுடு நாடாளுமன்றத்தில் எப்போதும் நகைச்சுவையுடனும், அடுக்கு மொழிகளுடனும் பேசுவது வழக்கம். இதை அவர் மாநிலங்களவையின் தலைவரான பின்பும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.