

ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம், ஆம் ஆத்மி கட்சி ஆகியவை ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் ஆதரவுடன் ஜனநாயகத்தை வேரறுப்பு செய்து காங்கிரஸ் தலைமை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை வீழ்ச்சியடையச் செய்தனர் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தெரிவித்தார்.
ஆம் ஆத்மி முன்னாள் உறுப்பினர் மற்றும் சிவில் உரிமைகள் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி கூறும்போது பாஜக-ஆர்.எஸ்.எஸ் முட்டுக்கொடுக்க ஆம் ஆத்மியும் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கமும் சேர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை வீழ்த்தினர், எதற்காக எனில் தாங்கள் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதற்காகவே என்று குற்றம்சாட்டியுள்ளார்.
“எங்களுக்கு ஏற்கெனவே தெரியும், ஆனால் பிரசாந்த் பூஷண் இதனை உறுதி செய்தார் என்று பூஷண் கூறியதன் ஊடகச் செய்தியையும் டேக் செய்து ட்வீட் செய்துள்ளார் ராகுல் காந்தி.
“ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற இயக்கமும் ஆம் ஆத்மியும் ஆர்.எஸ்.எஸ். - பாஜக முட்டுக் கொடுக்க ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டு யுபிஏ ஆட்சியை பதவியிறக்கினர்.” என்று ட்வீட் செய்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம் என்பதுதான் ஆம் ஆத்மிக்கு முன்னோடி. 2015-ல் பூஷண் மற்ரும் யோகேந்திர யாதவ் ஆகியோரை ஆம் ஆத்மி கட்சியிலிருந்து கட்சித் தலைமை நீக்கியது, கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்தது.
ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கம் 2011 மற்றும் 2012களில் ஊழலுக்கு எதிரான போராட்டங்களை நடத்தியது. அதாவது ஜன் லோக்பால் மசோதாவை அறிமுகம் செய்யக் கோரி போராட்டம் நடத்தியது.
பிரசாந்த் பூஷன் கூறியது என்ன?
இந்தியா டுடே டிவியில் ராஜ்தீப் சர்தேசாய்க்கு பேட்டியளித்த பிரசாந்த் பூஷண், “இரண்டு விஷயங்களுக்காக நான் வருந்துகிறேன். அதில் ஒன்று, ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ்.-பாஜக தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதை தாங்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காக பயன்படுத்திக் கொண்டதை, யுபிஏ ஆட்சியை கீழிறக்குவதற்காகப் பயன்படுத்தியதை நாங்கள் கவனிக்கத் தவறியது.
எனக்கு இதில் சந்தேகமேயில்லை, அண்ணா ஹசாரேவும் ஆர்.எஸ்.எஸ். -பாஜகவின் திட்டத்தை அறிந்திருக்கவில்லை. அரவிந்த் கேஜ்ரிவாலுக்குத் தெரியும். இதில் எனக்குச் சந்தேகமேயில்லை.
2வது விஷயம் நான் வருந்துவது, அரவிந்த் கேஜ்ரிவாலின் குணத்தை முன்னதாகவே அறிந்து கொள்ளாமல் போனது. மிகவும் தாமதமாகவே புரிந்து கொண்டேன். தாமதமாகப் புரிந்து கொள்வதற்குள்ளாகவே இன்னொரு பிராங்கன்ஸ்டைன் கோர உருவத்தை உருவாக்கி விட்டோம்.” என்றார்.