

நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக ஆதாரம் எதுவும் இல்லை என்று சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அமர்கொண்டா முர்கடங்கல் நிலக்கரிச் சுரங்கம் ஜிண்டால் குழும நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, மத்திய நிலக்கரித் துறை முன்னாள் இணை அமைச்சர் தாசரி நாராயண ராவ், தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உட்பட 15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மன்மோகன் சிங், எரிசக்தித் துறை முன்னாள் செயலாளர் ஆனந்த் ஸ்வரூப் மற்றும் சுரங்கத் துறை முன்னாள் செயலாளர் ஜெய் சங்கர் திவாரி ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மதுகோடா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா தனது வாதத்தில் கூறியதாவது:
இந்த வழக்கில் மன்மோகன் சிங்கை சேர்ப்பதற்கான முகாந் திரம் இல்லை. மேலும் நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாக எவ்வித ஆதாரமும் இல்லை.
மேலும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று மனுதாரர் கோரி யுள்ள 2 நபர்களும் அரசுத் தரப்பு முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட் டுள்ளனர். அவர்கள் சுரங்க ஊழலில் ஈடுபட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. இந்த வழக்கின் விசார ணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் நீதிமன்றத்தின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்திலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவரால் (மது கோடா) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி பராசர், அக்டோபர் 16-ம் தேதி தனது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.
முன்னதாக, இந்த மனு மீது நடைபெற்ற விசாரணையின்போது, தாசரி நாராயண ராவ் சார்பில் அவரது வழக்கறிஞர் சதீஷ் மணிஷிண்டே நீதிமன்றத்தில் கூறும் போது, “முறைகேடு நடைபெற்ற தாகக் கூறப்படும் காலத்தில் நிலக் கரித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த மன்மோகன் சிங்கை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற மது கோடாவின் கோரிக்கையை ஆதரிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.