Last Updated : 15 Sep, 2020 10:05 AM

 

Published : 15 Sep 2020 10:05 AM
Last Updated : 15 Sep 2020 10:05 AM

ஆக்ராவின் முகலாயர் அருங்காட்சியகம்  ‘சத்ரபதி சிவாஜி மஹராஜ்’ என்ற பெயரில் மாற்றப்படுகிறது: உ.பி. முதல்வர் யோகி அறிவிப்பு

உத்திரப்பிரதேசம் ஆக்ராவில் அம்மாநில அரசு சார்பில் முகலாயர் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் முகலாயர் எனும் பெயரை ’சத்ரபதி சிவாஜி மஹராஜ்’ என மாற்றுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உலக அதிசயமான தாஜ்மகால் உபியின் ஆக்ராவில் அமைந்துள்ளது. இதை கட்டிய முகலாய மன்னர் ஷாஜஹான் அமைத்த செங்கோட்டை, அதன் அருகில் உள்ளது.

இதில் முகலாய மன்னர் அவுரங்கசீபால், சத்ரபதி சிவாஜி சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கிருந்து அவர் பழக்கூடைகளில் தப்பியதாகவும் வரலாற்று பாடங்களில் உள்ளது.

ஆனால், இதற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை எனவும், சத்ரபதி சிவாஜி ஜெய்பூரின் ஒரு மாளிகையில் தான் சிறை வைக்கப்பட்டதாகவும் ஆக்ராவில் ஒரு கூற்று உள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் அந்நகரின் பிரபல வரலாற்றாசிரியரான ராம்நாத், முகலாயர்கள் மீதான தனது ஆய்வு நூல்களிலிலும் எழுதியுள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை ஆக்ராவின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அம்மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் யோகியின் கானொலியில் கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் ஆக்ராவின் சிற்பகிராமம் பகுதியில் கட்டப்பட்டு வரும் முகலாயர் அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் செய்ய இருப்பதை அறிவித்தார்.

இந்த பெயர் மாற்றத்திற்கானக் காரணமாக முதல்வர் யோகி கூறும்போது, ‘நம் நாயகர்களாக முகலாயர்களை எப்படி கருத முடியும்? இதற்கு தேசியவாதத்தை ஊட்டி, பொதுமக்களின் சுயமரியாதை காத்த மன்னர் சிவாஜியே உகந்தவர்.’ எனத் தெரிவித்தார்.

மகராஷ்டிராவை சிவாஜியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் சிவசேனாவுடன் பாஜகவிற்கு கருத்து மோதல் நிலவி

வருகிறது. இதற்கு அங்கு காங்கிரஸ், தேசியவாதக் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா அமைத்த ஆட்சியே காரணம்.

இந்த சூழலில் ஆக்ரா அருங்காட்சியகத்தின் முகலாயர் எனும் பெயர் சத்ரபதி சிவாஜி பெயரில் மாற்றம் செய்யப்படுவது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ரூ.140 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த அருங்காட்சியகம், உபியில் முதல்வராக இருந்த சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவால் துவக்கப்பட்டது.

இதுபோல், உபியில் முகலாயர் காலங்களின் முஸ்லிம் பெயர்கள் மாற்றப்படுவது முதன்முறை அல்ல. ஏற்கனவே, உபியின் மாவட்டங்களான அலகாபாத்தை பிரயாக்ராஜ் எனவும், பைஸாபாத்தை அயோத்யா என்றும் முதல்வர் யோகியால் மாற்றப்பட்டிருப்பதும் நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x