

வரும் 17ம் தேதி பிரதமர் மோடிக்கு 70வது பிறந்த தினம். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வாரத்தை சேவை வாரமாகக் கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது.
கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் இந்த வாரம் முழுதும் தங்களை மக்கள் சேவையில் ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லி, கவுதம்புத்த நகரில் கட்சித் தொண்டர்களிடையே ஜே.பி.நட்டா கூறும்போது, “நண்பர்களே, 2014-ல் மோடி பிரதமானதோடு மட்டுமல்லாமல் நாட்டின் அரசியல் பண்பாட்டையே மாற்றியுள்ளார். மக்களும் முந்தைய ஆட்சிக்கும் இப்போதைய ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டு விட்டனர்.
2014-க்கு முன்பாக அரசியல் தலைவர்கள் வருவார்கள் வாக்குறுதி கொடுப்பார்கள், நிறைவேற்ற மாட்டார்கள். மோடி அதை மாற்றி விட்டார். நாம் மக்களுக்காக பணியாற்றி அதன் விவரங்களுடன் மக்களிடம் செல்கிறோம். இப்படித்தான் நாம் பணியாற்றுகிறோம்.
தற்போது பிரதமர் மோடி தன்னை மக்கள் சேவையில் அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். இப்போது சேவைதான் தேவை. வரிசையில் கடைசியில் நிற்கும் ஏழைகள், துன்பத்துக்கு ஆளானோர், ஒன்றுமில்லாதவர்கள், தலித்துக்களை நாம் மைய நீரோட்டத்துக்கு கொண்டு வரும் வகையில் பணியாற்றுவோம்.
பிரதமர் மோடிக்கு 70வது பிறந்த தினம் வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 70 இடங்களை கண்டுபிடித்து தூய்மைப் பணி செய்வோம். பழங்கள் விநியோகம் செய்வோம். மருத்துவமனைகளுக்குச் செல்வோம், பிளாஸ்மா தானத்தை ஊக்குவிப்போம். ஒவ்வொரு மாவட்டத்திலும் 70 மாற்றுத் திறனாளிகளுக்கு உபயோகப்படும் சாதனங்களை வழங்குவோம். 70 மெய்நிகர் ஊர்வலங்கள் நடத்துவோம்”
இவ்வாறு கூறினார் நட்டா.