

உத்தரபிரதேசத்தில் அரசு அலுவலக கட்டிடங்கள், நீதிமன்றங்களை பாதுகாக்க சிறப்பு பாதுகாப்புப் படையை உ.பி. அரசு அமைக்கிறது. குற்றவாளிகளை வாரன்ட் இல்லாமல் கைது செய்ய இந்தப் படைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
உ.பி.யில் நீதிமன்றங்கள், அரசு அலுவலக கட்டிடங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளிக்க சிறப்பு அதிரடிப்படையை மாநில அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.1,747.06 கோடி செலவில் 8 பட்டாலியன் கொண்ட படையினர் நியமிக்கப்பட உள்ளனர். இந்த படையைச் சேர்ந்தவர்கள், யாரையும் வாரன்ட் இல்லாமல் சோதனையிடவோ அல்லது கைது செய்யவோ முடியும். இதற்கான அதிகாரம் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக தனி சட்ட திருத்தம் கொண்டுவரப்படும். மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு (சிஐஎஸ்எப்) உள்ளதைப் போல இவர்களுக்கும் அதிகாரம் வழங்கப்படும்.
இந்த தகவல்களை உ.பி. மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவினாஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார். மாநிலத்தின் பாதுகாப்பை பலப்படுத்த சிறப்புப் பாதுகாப்பு படை அமைப்பது முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கனவு திட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், சந்தகேப்படும் நபர்கள் அல்லது குற்றவாளிகளைவாரன்ட் இல்லாமல் சோதனைசெய்யும் அல்லது கைது செய்யும் அதிகாரம் சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படுவதன் மூலம் அந்த அதிகாரம் முறைகேடாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.