

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 19-ம் தேதி புரட்டாசி மாத சனிக்கிழமையன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆனால் கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு, கோயில் வரலாற்றிலேயே முதன் முறையாக உற்சவர்களான தேவி, பூதேவி சமேத மலையப்பரின் திருவீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்குள் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் மட்டுமேவாகன சேவை நடத்தப்பட உள்ளது. தினமும் எந்தெந்த வாகனங்களில் வழக்கமாக உற்சவம் நடைபெறுமோ அந்தந்த வாகனங்களில் ரங்கநாயக மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளி காட்சியளிப்பார். இந்த பிரம்மோற்சவ விழாவையொட்டி ஆகம விதிகளின்படி இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலை பல்வேறு வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தும் ‘கோயில் ஆழ்வார் திருமஞ்சன சேவை’ நடத்தப்பட உள்ளது.
இதில், பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம்,குங்குமப்பூ உள்ளிட்ட பொருட்களை கலந்து மூலவர் சன்னதி உட்பட கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து துணை சன்னதிகள், கொடி கம்பம், பலிபீடம்,விமான கோபுரம் என அனைத்துஇடங்களிலும் சுத்தப்படுத்தப் படும். அதன் பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்கள் மதியத்திற்கு மேல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.