

மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை ‘இந்தி திவாஸ்’ (இந்தி தினம்) நாட்டின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. இதற்கு முன்னாள் முதல்வரும், மஜத மூத்த தலைவருமான குமாரசாமி, கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தி தின கொண்டாட்டத்தை கண்டித்து கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட நவநிர்மாண் சேனா உள்ளிட்ட அமைப்பினர் கர்நாடகா முழுவதும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூருவில் ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே கன்னடகூட்டமைப்பின் சார்பில் நூற்றுக்கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹூப்ளி, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட இடங்களில் கன்னட அமைப்பினர் மத்திய அரசின் அலுவல கங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெங்களூருவில் கன்னடஅமைப்பினர் நூற்றுக்கணக் கானோர் பெங்களூரு சிட்டி சங்கொலி ராயண்ணா ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது இந்திதிணிப்புக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அந்த சமயத்தில் சிலகன்னட அமைப்பினர் பெங்களூரு ரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை கற்களால் உடைத்து தகர்த்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கன்னட அமைப்பினரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
இதனிடையே முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தி தின கொண்டாட்டம் இந்தித் திணிப்பின் ஒரு அங்கம்தான். கன்னடர்கள் நிச்சயம் இந்தி தினத்தை எதிர்க்கின்றனர். இந்தி தேசிய மொழி கிடையாது. இந்திய அரசியல் சாசனத்தில் அவ்வாறு எங்கும் குறிப்பிடப்படவில்லை. மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் முன் இத்தகைய போக்கை நிறுத்துங்கள். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி தினத்தைக் கொண்டாடுவது ஏன்? அதை ரத்து செய்ய வேண்டும்’’என குறிப்பிட்டுள்ளார்.