

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஸ் வெற்றி பெற்றார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும்.
கரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும். கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை.
கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர். கேள்வி நேரம் இடம் பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் மாநிலங்களவையின் துணைத் தலைவராக இருந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஸ் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய துணைத் தலைவரைத் தேர்வுசெய்ய தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அந்த பதவிக்கு பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஸ் நாராயணன் சிங் மீண்டும் பாஜக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு, எதிர்க்கட்சிகள் சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் ஜா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
250 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு 80 எம்.பி.க்கள் உள்ளனர். காங்கிரஸுக்கு 40 எம்.பி.க்கள் உள்ளனர். 125 உறுப்பினர்களின் பலம் தேவை என்ற நிலையில் ஆளும் பாஜக கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. எனினும் பிஜூ ஜனதாதளம், அதிமுக, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தங்கள் கூட்டணி சார்பில் ஹரிவன்ஸ் பெயரை முன்மொழிந்தார்.
எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தங்கள் கூட்டணி வேட்பாளராக மனோஜ் ஜா பெயரை முன்மொழிந்தார். திமுகவின் திருச்சி சிவா உள்ளிட்டோர் அவரது பெயரை முன்மொழிந்தனர். இதனை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஸ் வெற்றி பெற்றார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.