Last Updated : 14 Sep, 2020 05:11 PM

 

Published : 14 Sep 2020 05:11 PM
Last Updated : 14 Sep 2020 05:11 PM

விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். -நாடாளுமன்ற மக்களவையில் நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளின் பூஜ்ஜிய நேரத்தில் விவசாயிகள் பிரச்சனை எழுப்பப்பட்டது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின்(ஐயூஎம்எல்) தமிழக எம்.பியான கே.நவாஸ்கனி, விவசாயிகளுக்கானப் பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மக்களவையில் வலியுறுத்தினார்.

இது குறித்து மக்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் ஐயூஎம்எல் கட்சியின் கொறடாவும் ராமநாதபுரம் தொகுதி எம்.பியுமான கே.நவாஸ்கனி பேசியதாவது:

எனது நாடாளுமன்ற தொகுதி இராமநாதபுரத்தில் விவசாயிகளுக்கான 2018-19 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகை 117 கிராமங்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை.

இது இன்னும் நிலுவையில் இருக்கின்றது. இதே பிரச்சனையில் ஐந்து ஏக்கருக்கு மேல் இருக்கக் கூடிய பெருவிவசாயிகளின் 6901 பயிர் காப்பீட்டுக்கான விண்ணப்பங்களும் நிலுவையில் உள்ளது.

இதற்கானக் காரணத்தை சம்மந்தப்பட்ட அலுவகலத்தில் கேட்டிருந்தோம். அதில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை சோதிப்பதற்காக காலதாமதம் ஆவதாக அந்த காப்பீட்டு நிறுவனம் தரப்பில் சொல்கிறார்கள்.

117 கிராமங்களுக்கு 25 சதவீத காப்பீட்டு தொகை உடனடியாக வழங்க முடியும் எனக் காப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளது. இதை மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு மற்றும் மத்திய வேளாண் துறை அமைச்சகம் ஆகியவை நிராகரித்துள்ளன.

மாறாக, நூறு சதவீத காப்பீட்டு தொகையை தான் வழங்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்கள். இதில் மத்திய அரசு தலையிட்டு 117 கிராமங்களுக்கும் 100 சதவீத காப்பீட்டு தொகை உடனடியாக வழங்க வேண்டும்.

ஐந்து ஏக்கருக்கும் அதிக நிலம் கொண்ட பெருவிவசாயிகளின் 6901 விண்ணப்பங்களுக்குமான காப்பீடு தொகையையும் உடனடியாக வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

ராமநாதபுரம் என்பது ஏற்கனவே வறட்சியான மாவட்டம்.

இங்கு விவசாயம் செய்வதற்கே சவாலாகப் பயிர் விளையாத சூழல் உள்ளது. பயிர் காப்பீட்டுத் தொகையும் வழங்காததால் விவசாயிகள் மிகுந்த நெருக்கடியில் இருக்கிறார்கள்.

உடனடியாக மத்திய அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி பயிர் காப்பீட்டு தொகையை வழங்குவதற்கு

சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x