காங். மூத்த தலைவர், சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சர் கரோனா வைரஸில் மரணம்

காங். மூத்த தலைவர், சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சர் கரோனா வைரஸில் மரணம்
Updated on
1 min read

காங்கிரஸ் மூத்த தலைவரும், சத்தீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சருமான சனேஷ் ராம் ராதியா கரோனா தொற்று காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 78.

வடக்கு சத்தீஸ்கரைச் சேர்ந்த பிரபல பழங்குடியினத் தலைவரான சனேஷ் ராதியா 1977 ஆம் ஆண்டில் அப்போதைய பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசத்தில் உள்ள தரம்ஜெய்கர் தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஒரே தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.

மத்தியப் பிரதேசத்தில் திக்விஜய் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கால்நடை வளர்ப்புத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். பின்னர் 2000ல் சத்தீஸ்கர் மாநிலம் தனியே பிரிக்கப்பட்ட பின்னர் அஜித் ஜோகி தலைமையிலான 2000-2003 அரசில் உணவுத் துறை அமைச்சராக இருந்தார்.

இந்நிலையில் சனேஷ் ராம் ரதியாவுக்கு வேறு சில உடல்நலப் பிரச்னைகள் இருந்ததன் காரணமாக கடந்த சனிக்கிழமை ராய்கரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணியளவில் உயிரிழந்ததாக ராய்கார் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் எஸ்.என். கேஷரி தெரிவித்தார்.

இவரது மூத்த மகன் லால்ஜித் சிங் ரதியா தற்போது சத்தீஸ்கரில் உள்ள தரம்ஜெய்கர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in